அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு எதிரொலியாக ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணை அமைக்க வேண்டிய நெருக்கடி எடப்பாடி அரசுக்கு உருவாகியிருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அப்போதே பல்வேறு கட்சிகளும் குரல் கொடுத்தன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது தர்மயுத்தத்திலும் இதையே பிரதான கோரிக்கையாக வைத்தார். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில், ‘உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மூலமாக விசாரிக்க ஏற்பாடு செய்வதாக’ அறிவித்தார். அதன்பிறகே இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. ஆனால் அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘அப்பல்லோவில் ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டார் என நாங்கள் கூறியது பொய். சசிகலாவை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. பொய் கூறியதற்காக மக்கள் எங்களை மன்னிக்க வேண்டும்’ என கூறினார்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், ‘அப்பல்லோவில் ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருக்கிறார். அப்படியென்றால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் இலாகாவை கவனிக்க ஆளுனருக்கும் அறிவுறுத்தி ஜெயலலிதா கையெழுத்து, கைரேகை வைத்தது எப்படி? எனவே உடனே சிபிஐ விசாரணை தேவை’ என குறிப்பிட்டிருக்கிறார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமாக கருத்து கூறுகிறார்கள். எனவே இது தொடர்பாக விசாரணை தேவை’ என குறிப்பிட்டார்.
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் நேற்று கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் முகாமிட்டிருக்கும் தனது ஆதரவாளர்களை சந்தித்தபிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘அப்பல்லோவில் ஜெயலலிதாவை கடைசி 65 நாட்கள் சசிகலாவே சந்திக்கவில்லை’ என கூறினார். ‘அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோ காட்சிகள் உள்ளதாகவும், விசாரணை ஆணையம் அமைத்தால் அதில் சமர்ப்பிப்போம்’ என்றும் டிடிவி கூறினார்.
இவர்களது கருத்துகளால், ஜெ மரணம் தொடர்பாக விசாரணையை உடனே தொடங்க வேண்டும் என்கிற கருத்து வலுப்பெற்று வருகிறது. இதற்கிடையே முதல்வர் எடப்பாடி அறிவித்தபடி உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதனால் இதில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.