சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பெரிய பாண்டியன். சென்னை கொளத்தூரில் உள்ள நகைக் கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தை விசாரிக்கும் தனிப்படையில் இடம் பெற்றிருந்தார். கடந்த 13ம் தேதி ராஜஸ்தான் சென்ற தனிப்படை போலீசார், கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர். அப்போது, கொள்ளையர்களுடன் ஏற்பட்ட மோதலின்போது, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக ஆய்வாளர் பெரியபாண்டியன் உடன் சென்ற கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில் பேரில், பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், ராமவாஸ் மற்றும் ஜெயிதரன் சாலைக்கு இடையிலுள்ள சுண்ணாம்பு கல் சூளையில், கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, 13ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு, ஆய்வாளர் பெரியபாண்டியன், தலைமை காவலர்கள் எம்ப்ரோஸ், குருமூர்த்தி உள்ளிட்ட தனிப்படையினர், அங்கு சென்று கதவை தட்டியதாகவும், அப்போது கொள்ளையன் நாதுராம், அவரது காதலி மஞ்சு, தீபு ராம் ஆகியோர் கதவை திறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் என அடையாள அட்டையை காண்பித்தபோது, மூன்று பேருடன் சேர்ந்து, வீட்டில் இருந்த ஒரு ஆண், 3 பெண்கள் சேர்ந்து தங்களை தடிகளாலும், இரும்பு கம்பிகளாலும் தாக்கியதாகவும், தானும் ஆய்வாளர் பெரியபாண்டியனும் துப்பாக்கியை எடுத்து, எச்சரித்துவிட்டு, வெளியேற முயற்சித்ததாகவும் முதல்தகவல் அறிக்கையில் முனிசேகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் குண்டுக் காயம் பட்டு ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 'சக ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கியால்தான் ஆய்வாளர் பெரியபாண்டி சுடப்பட்டுள்ளார் என்று ராஜஸ்தானின் பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்க்கவ் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பல்வேறு தரப்பினரையும் விசாரித்து வருவதாகவும், கைப்பற்றப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும், தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தியதில், பெரியபாண்டியன் உடலில் பாய்ந்த அந்த ஒரு குண்டு, ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கியால் இருந்து வெளியேறியது என்றும் தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்களிடமிருந்து பெரியபாண்டியனை காப்பற்ற நினைத்து, ஆய்வாளர் முனிசேகர் கொள்ளையர்களை நோக்கி சுடும்போது தவறுதலாக, ஆய்வாளர் பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்திருக்கலாம் என்று, விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பாலி எஸ்பி தீபக் பார்கவ் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்த தமிழக போலீசார், 'துப்பாக்கி கீழே விழுந்தது தொடர்பாக ராஜஸ்தான் போலீஸில் முனிசேகர் ஏற்கெனவே புகார் கொடுத்துள்ளார். தற்போது முனிசேகர் சுட்டதாக ராஜஸ்தான் போலீஸார் கூறுவது எங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. முனிசேகர் வைத்திருந்தது 9எம்எம் பிஸ்டல். அதன் லாக் ரீலீஸாகி விட்டால் 20 குண்டுகளைச் சுட முடியும். ஆனால் ஒரே ஒரு குண்டு மட்டுமே முனிசேகரின் துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டுள்ளது.
கொள்ளையர்களிடம் துப்பாக்கி கிடைத்திருந்தால் தமிழக போலீஸாரின் கதி பரிதாபமாகிருக்கும். இதுதான் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநில போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் சம்பவ இடத்திலிருந்தவர்களும் சில தகவல்களைச் சொல்லியிருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே முனிசேகர் மீது ராஜஸ்தான் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்றனர்.
இந்தச் சூழ்நிலையில், சென்னை கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் ஜெயத்ரன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அஜாக்கிரதையாக இருந்ததன் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் ஜெயத்ரன் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். அதுமட்டுமின்றி, கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற 3 காவலர்களும் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.