மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி, 16 ஆண்டுகளாக போராடிய இரோம் சர்மிளா தன் காதலரை மணப்பதற்கான விண்ணப்பத்தை கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் அளித்தார்.
மணிப்பூரின் இரோம் சர்மிளாவுக்கு அறிமுகம் தேவையில்லை. சர்ச்சைக்குரிய அஃப்ஸ்பா எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி, 16 ஆண்டுகளாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டார். இந்நிலையில், அரசியல் உரிமையே தனக்கான போராட்டத்தை வெற்றியை நோக்கி எடுத்துச் செல்லும் எனக்கூறி, இரோம் சர்மிளா கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
அதன்பின், மக்கள் எழுச்சி மற்றும் நீதிக்கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மணிப்பூர் சட்டசபை தேர்தலில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒக்ராம் இபோபியை எதிர்த்து தௌபால் தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால், தன் மக்களின் நலனுக்காக 16 வருடங்களாக போராடிய இரோம் சர்மிளாவை அம்மக்கள் வெறும் 90 ஓட்டுகளுடன் படுதோல்வியடைய செய்தனர். தோல்வியடைந்தது குறித்து கருத்து தெரிவித்த இரோம் சர்மிளா, “வருங்காலத்தில் நான் தேர்தல்களில் போட்டியிட மாட்டேன். மக்கள் போராளியாகவே என் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். மக்கள் எழுச்சி நீதிக்கூட்டணி அமைப்பை வலுவடைய செய்வேன். சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் அஃப்ஸ்பா சட்டத்தை நீக்க போராடுவேன்”, என கூறினார்.
அதன்பிறகு தன் காதலரான அயர்லாந்த் நாட்டை சேர்ந்த தேஸ்மண்ட் ஹட் ஹோவிடன்-ஐ திருமணம் செய்துகொண்டு வாழ விரும்புவதாக தெரிவித்த இரோம் சர்மிளா, தன் காதலருடன் கொடைக்கானலில் குடியேறினார்.
இந்நிலையில், இரோம் சர்மிளா இன்னும் ஒரு மாதத்தில் தன் காதலரை மணக்கவிருப்பதாக தகவல் வெளியாகியது. அது உண்மைதான் என நிரூபிக்கும் வகையில், இரோம் சர்மிளா தன் காதலர் தேஸ்மண்ட் ஹட் ஹோவிடனுடன் புதன் கிழமை காலையில் கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று திருமணம் செய்வதற்கான விண்ணப்பத்தை அளித்தார். இதன்பிறகு, ஒரு மாத காலத்தில் அவர்களுடைய திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/DEg40EJXUAEeyc2-300x217.jpg)
இரோம் சர்மிளாவின் காதலர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் இந்தியாவில் யாருக்கேனும் அவர்களுடைய திருமணத்தில் ஆட்சேபனம் இருந்தால் இந்த ஒரு மாத காலத்திற்குள் தெரிவிப்பர். யாருக்கும் ஆட்சேபனம் இல்லாத பட்சத்தில் ஒரு மாத காலத்திற்கு பிறகு அவர்களுடைய திருமணம் நடைபெறும்.