பாஜகவுடன் திமுக நெருங்கி வருவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது. சென்னை நந்தனத்தில், 30ம் தேதி நடைபெற உள்ள கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமீத் ஷா கலந்து கொள்கிறார்.
இந்த மாற்றம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக திமுக கூட்டணி
தமிழகத்தில் தற்போதைய நிலையில் திமுகதான் பெரிய கட்சி. இந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக விரும்புகிறது. 2004ம் ஆண்டு முதல் திமுக காங்கிரஸ் கூட்டணியில் நீடித்து வருகிறது.
1999ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணியில் திமுக இடம் பிடித்தது. அதன் பின்னர் 2004ம் ஆண்டு அந்த கூட்டணி உடைந்தது.
கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, திமுக கூட்டணிக்கு பாஜக முயன்றது. ஆனால் சிறுபான்மையினர் வாக்குகள் பாதிக்கப்படும் என்பதால் திமுக கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளவில்லை.
2017ம் ஆண்டு கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை அகில இந்திய தலைவர்களை அழைத்து கொண்டாடினார்கள். ஆனால் பாஜகவை அழைக்கவில்லை.
கருணாநிதி நலம் விசாரித்த மோடி
தமிழகத்தில் காவிரி பிரச்னை பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளன போதும், நீட் தேர்வு தொடர்பான சர்சையின் போதும் திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் பாஜகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.
கடந்த ஆண்டு நாளிதழ் ஒன்றின் நூற்றாண்டு விழாவுக்கு வந்த பிரதமர் மோடி சென்னை வந்தார். விழா முடிந்ததும், கருணாநிதியை வீட்டில் சந்தித்துப் நலம் விசாரித்தார்.
அதன் பின்னர் நடந்த ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக டெப்பாசிட் இழந்தது. மோடி, கருணாநிதியை சந்தித்ததால் சிறுபான்மையினர் வாங்குகளை திமுக இழந்ததாக விமர்சிக்கப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 7ம் தேதி உடல் நலமின்றி காலமானார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி வந்தார்.
முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதியை பாஜக தலைவர்கள் வந்து சந்தித்தனர். கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைக்க பாஜக மறைமுகமாக உதவி செய்ததாகவும் பேச்சு உண்டு.
கருணாநிதியின் மறைவையடுத்து, திமுக சார்பில் திருச்சியில் பத்திரிகையாளர்கள் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மதுரையில் இலக்கியவாதிகள் அஞ்சலில் செலுத்தினர். 26ம் தேதி நெல்லையில் நடக்கும் நிகழ்ச்சியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொள்கிறார்.
சென்னை நந்தனத்தில் நடைபெறும் தெற்கிலிருந்து உதித்த சூரியன் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
திமுக மேடையில் அமீத் ஷா
இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமீத் ஷாவும், காங்கிரஸ் கட்சியின் சார்பாக குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
வாஜ்பாய் மறைந்த போது இரவோடு இரவாக டெல்லி சென்று அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின். இன்று அவருடைய அஸ்திக்கு அஞ்சலி செலுத்த பாஜக அலுவலகமான கமலாலயம் சென்றார்.
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமீத் ஷா கலந்து கொள்வதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்துப் பார்க்க வேண்டும்.
இது குறித்து திமுக மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, ‘‘நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் தலைமை தேர்தலில் அதிக இடங்களை கேட்க வேண்டும் என்பதற்காக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளோடு தொடர்பில் இருக்கிறது.
டிடிவி.தினகரன் வெளிப்படையாகவே காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கிறார். அவர்கள் அணி மாற வாய்ப்பு உள்ளது. ஒருபோதும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை வெளியே அனுப்பியது கிடையாது.
நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியுடன் கூட்டணி அவசியம். கலைஞர் அவர்கள் தேசிய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர். அதனாலேயே தேசிய தலைவர்களை அழைத்து நினைவேந்தல் நடத்துகிறோம்.
இதில் அரசியல் ஏதும் இல்லை. மூத்த தலைவருக்கு செய்யும் மரியாதையாகவே நினைக்கிறோம்’’ என்றார்.
கூட்டணி கட்சியினர் சிலரிடம் பேசிய போது, ‘‘அழகிரியை பாஜக இயக்குவதாக திமுக தலைமைக்கு சந்தேகம் இருக்கிறது. அதை தடுக்கவே பாஜகவோடு நெருங்குவது போல நாடகமாடுகிறது. பாஜகவோடு கூட்டணி வைக்க மாட்டார்கள் என்பது எங்கள் நம்பிக்கை’’ என்றார்.