நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு 3 மாதம் போதுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. காரணம், சசிகலாவில் ஆரம்பித்து லண்டன் ரிச்சர்ட் பீலே வரை விசாரிக்க வேண்டும்.
ஜெயலலிதா மரண மர்மம், இன்னமும் விலகவில்லை. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை பழங்காநத்தம் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘அப்பல்லோவில் இருந்தபோது ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் குறிப்பிட்டது பொய். அதற்காக மன்னிப்பு கோருகிறோம்’ என்றார். இதனால் ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை அதிகமானது.
இந்தச் சூழலில் ஏற்கனவே அறிவித்த விசாரணை ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதியின் பெயரை செப்டம்பர் 25-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது, அவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஆறுமுகசாமி. கோவையை சேர்ந்தவர் இவர். வயது 65.
விசாரணைக்கான கால அளவு, விசாரணை ஆணையத்தின் அதிகார வரம்பு ஆகியனவற்றை செப்டம்பர் 27-ம் தேதி (செவ்வாய்) இரவு தமிழக பொதுத்துறை முதன்மை செயலாளர் மூலமாக தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கான கால அவகாசம் 3 மாதங்கள் ஆகும். 2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சூழல், அவரது அப்போதைய நிலைமை, அதன்பிறகு டிசம்பர் 5-ம் தேதி வரை அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை ஆகியவை குறித்து இந்த ஆணையம் விசாரிக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்போது கேள்வி, ஜெயலலிதா மரண மர்மம் குறித்து விசாரிக்க 3 மாத அவகாசம் போதுமா? என்பதுதான். ஜெயலலிதா செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழல் குறித்து அறிய சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரிடம் இந்த ஆணையம் விசாரிக்க வேண்டியிருக்கும்.
சசிகலா, இளவரசி ஆகியோர் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்கு அழைக்க குறிப்பிட்ட அவகாசம் தேவைப்படும். அதேபோல அப்பல்லோவில் 75 நாட்கள் நடைபெற்ற சிகிச்சை தொடர்பாக விசாரிப்பதும் சில நாட்களில் முடிகிற சமாச்சாரம் அல்ல.
டெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள் குழுக்களாக பல முறை வந்து சிகிச்சை கொடுத்தனர். அதேபோல சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆகியோரை விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
ஜெயலலிதாவின் சிகிச்சையை மேற்பார்வை செய்ய தமிழக சுகாதாரத்துறை சார்பில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவினரும் விசாரணைக்கு உட்படுவார்கள். அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள்.
இன்னும் சில தகவல்களுக்காக மருத்துவமனையில் நலம் விசாரிக்கச் சென்ற மாற்றுக் கட்சித் தலைவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படலாம். தவிர, ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல் தெரிந்த யார் வேண்டுமானாலும் ஆணையத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டால், அதுவே பெரிய பட்டியலாக நீளும்.
அவ்வளவு பெரிய பட்டியலை 3 மாதங்களில் விசாரிப்பது சாத்தியமாக வாய்ப்பே இல்லை. விசாரணை ஆணையத்தின் வரம்புகள் குறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில் பேட்டி கொடுத்த எதிர்கட்சித் தலைவர்கள் சிலர்கூட, ‘6 மாத அவகாசத்தை விசாரணை ஆணையத்திற்கு வழங்கவேண்டும்’ என கேட்டிருந்தனர். ஆனால் அரசு எந்த அடிப்படையில் வெறும் 3 மாதங்களை நிர்ணயம் செய்தது எனத் தெரியவில்லை.
அரசு நினைத்தால், விசாரணை ஆணையத்தின் அவகாசத்தை நீடிக்கலாம்தான். அதை மனதில் வைத்தே குறைந்த அவகாசத்தை அறிவித்தால், அந்த அறிவிப்பின் நம்பகத்தன்மை என்னாகும்?