அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவமானப்படுத்தினாரா துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு? வைரலாகும் வீடியோ

அந்த வீடியோவில், வெங்கையா நாயுடுவிற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்த முயலும்போது, வேறு ஒருவர் குறுக்கிட்டு மலர் கொத்து கொடுக்க வருகிறார்.

தற்போதைய துணை குடியரசுத் தலைவரான ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

ஆளும் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநரும், தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியும் நிறுத்தப்பட்டனர்.

அதன்படி, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது. இதில் மொத்தம் 516 வாக்குகள் பெற்று நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கையா நாயுடுவிற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக ஒரு வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், வெங்கையா நாயுடுவிற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்த முயலும்போது, வேறு ஒருவர் குறுக்கிட்டு மலர் கொத்து கொடுக்க வருகிறார். இதையடுத்து, வெங்கையா நாயுடு ஏதோ கூற, உடனே பொன்னர் பின்வாங்க, அந்த நபர் வெங்கையாவிற்கு பூங்கொத்து கொடுக்கிறார். அதன்பின்னர், பொன்னர் வெங்கையாவிற்கு சால்வை போர்த்தி, பூங்கொத்தும் கொடுக்கிறார். அதை வாங்கிக் கொள்ளும், வெங்கையா பொன்னரை பார்த்து ‘போங்க..போங்க..’ என்பது போல் சைகை காட்டுகிறார். பொன்.ராதாவும் அப்படியே கிளம்பி விடுகிறார்.

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

×Close
×Close