காற்றுடன் மோதும் ஆணவத் துரும்பு என யாரைச் சொல்கிறது நமது எம்.ஜி.ஆர்?
அதிமுக பூசல்களை வெளிப்படுத்தும் கண்ணாடியாக அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ் ‘நமது எம்.ஜி.ஆர்.’ பரிணாமம் பெற்றிருக்கிறது. சமீப நாட்களாக இந்த இதழின் முதல் பக்கத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது நிகழ்ச்சிகளில் சொன்ன குட்டிக் கதைகளை ‘தாய் சொன்ன தத்துவக் கதைகள்’ என்ற தலைப்பில் தினமும் ஒன்றாக வெளியிட்டு வருகிறார்கள்.
அப்படி வெளியாகும் கதைகள், அ.தி.மு.க.வில் தற்போது அரங்கேறும் உள்கட்சி பூசல்களை சாடுவதாக அமைவதுதான் ஸ்பெஷல்! ஆகஸ்ட் 13-ம் தேதி ‘ஒரு நதியின் லட்சியம்’ என தலைப்பிட்டு வெளியான ஒரு கதை படு காரம்!
எடப்பாடி பழனிசாமி
‘ஒரு ஆறு அமைதியாக போய்க்கொண்டிருக்கிறது. போகும் பாதையில் வயல்களை வளம் கொழிக்க வைப்பதுதான் அதன் லட்சியம். அப்போது அடித்த காற்றில் எங்கிருந்தோ பறந்து வந்த துரும்பு, தன்னைத் தள்ளிக்கொண்டு வந்த காற்றிடம் சொன்னதாம். ‘இப்பப் பார்... இந்த ஆற்றை அப்படியே அசையாமல் நிறுத்திவிடுகிறேன்’ என்று!
இந்த முட்டாள் துரும்பின் அகங்காரப் பேச்சுக்கு காற்று பதில் சொல்ல விரும்பவில்லை. உடனே துரும்பு ஆணவம் தலைக்கேறி, ‘காற்றே, நான் நினைத்தால் உன்னையும் நிறுத்திவிடுவேன்’ என்று கொக்கரித்தது. சற்று நேரத்தில் ஆற்றில் ஒரு சுழல் ஏற்பட்டது. ஆணவத் துரும்பு அந்தச் சுழலில் அகப்பட்டுக்கொண்டு படாதபாடு பட்டது. கண நேரத்தில் அதன் கதை முடிந்துவிட்டது.
ஆனால் ஆறு தன் போக்கில் போய்க்கொண்டிருந்தது. அப்படியொரு சம்பவம் நடந்ததையே அது கவனிக்கவில்லை.’ என முடிகிறது அந்தக் கதை! 13-09-2003 அன்று நீலகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் ஜெயலலிதா சொன்ன கதைதான் இது! ஆனால் அ.தி.மு.க. பூசல்கள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் இந்தச் சூழலில் இந்தக் கதை வெளியாகியிருப்பதால் கட்சி வட்டாரத்தில் இது பற்றி பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
டிடிவி.தினகரன்
இந்தக் கதையில் கட்சியை, ஆறாக ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். ‘காற்றில் வந்த ஆணவத் துரும்புக்கு பதில் சொல்ல விரும்பவில்லை’என்பதாக வரும் வரிகள்தான் பல யூகங்களை விதைக்கிறது.
அண்மையில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த அபிடவிட்டுக்கு மாறாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தீர்மானம் போட்டு டி.டி.வி.தினகரனை கட்சியை விட்டு ஒதுக்கினர். இது குறித்து கருத்து தெரிவித்த டிடிவி.தினகரன், ‘அபிடவிட்டுக்கு மாறாக தீர்மானம் போட்டது 420, அதாவது மோசடி’ என குற்றம் சாட்டினார். இதற்கு பதில் தெரிவித்து டெல்லியில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, ‘அவர்தான் 420’ என டிடிவி.யை சாடினார். இதற்கு டிடிவி.தினகரன் இதுவரை நேரடியாக பதில் சொல்லவில்லை. இந்தச் சூழலில் இந்த் கதையை ‘நமது எம்.ஜி.ஆர்.’ எடுத்து விட்டிருக்கிறது.