'பிக் பாஸ்’ கமல்ஹாசனுக்கு அடுத்த நெருக்கடி : இசை வேளாளர்களை இழிவுபடுத்தியதாக நோட்டீஸ்

இசை வேளாளர்களை இழிவுபடுத்தியதாக நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு இசை வேளாளர்கள் இளைஞர்கள் நலச் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இசை வேளாளர்களை இழிவுபடுத்தியதாக விஜய் தொலைகாட்சி, நடிகர்கள் கமல்ஹாசன், நடிகர் சக்தி, எண்டிமோல் நிறுவனம் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு இசை வேளாளர்கள் இளைஞர்கள் நலச் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தனியார் தொலைகாட்சி நிறுவனமான விஜய் டி.வி.,-யில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். “பிக் பாஸ் தமிழ்” நிகழ்ச்சியில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

ஜாக் டி மோல் உருவாக்கிய டச்சு பிக் பிரதரை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காகவே கட்டப்பட்ட ஒரு இல்லத்தில் இதன் உறுப்பினர்கள் வாழ்கின்றனர். இவர்கள் உலகின் பிற தொடர்புகளில் இருந்து தனிமைப்படுத்தப் படுகின்றனர். ஒவ்வொரு வாரமும், வீட்டை விட்டு வெளியேறுவதற்கு, அவர்களது தோழர்களில் இரண்டு பேரை ஒவ்வொருவரும் பரிந்துரைக்க வேண்டும். பெரும்பாலானோரால் பரிந்துரைக்கப்படுபவர்கள் ஒரு பொது வாக்கெடுப்பை எதிர்கொள்வார்கள். இவற்றின் இறுதியில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்.

பிக் பாஸ் வீட்டினுள் அடைக்கப்படும் உறுப்பினர்களிடையே அவ்வப்போது போட்டிகள் நடத்தப்படும். அவ்வாறு கடந்த மாதம் 14-ம் தேதி நடத்தப்பட்ட போட்டி ஒன்றில், நடிகர் சக்தி நாதஸ்வர வித்வானாக நடித்துள்ளார்.

இந்நிலையில், நாதஸ்வரத்தை மரியாதை குறைவாக நடத்தி, இசை வேளாளர் சமூகத்தினரை இழிவு படுத்தி விட்டனர் என கூறி, விஜய் தொலைகாட்சி, நடிகர்கள் கமல்ஹாசன், நடிகர் சக்தி, எண்டிமோல் நிறுவனம் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு இசை வேளாளர்கள் இளைஞர்கள் நலச் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், “நாதஸ்வரத்தை சக்தி கையாண்ட விதமும், அங்கு நடைபெற்ற சம்பவங்களும், இசை வேளாளர் சமூகத்தினரின் மனநிலையை பாதித்ததுடன் அவர்களை இழிவு படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது. தங்களது வாழ்வாதாரமான நாதஸ்வரத்தை இசைக் கருவியாக மட்டும் இசை வேளாளர்கள் பார்ப்பதில்லை. தங்கள் சமூகத்துக்கு கிடைத்த தெய்வீக கருவியாகவே பார்க்கின்றனர். அதற்கு உயர் மரியாதையும் அவர்கள் செலுத்தி வருகின்றனர். எனவே, அத்தகைய நாதஸ்வரத்தை மரியாதை குறைவாக நடத்திய காரணத்திற்காக, ஏழு நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close