கோவையில் ஐ.எஸ். இயக்கத்திற்கு ஆதரவு திரட்டியதாக சந்தேகிக்கப்படும் 5 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு தமிழகம் மற்றும் கேரளத்தில் இருந்து சமூக வலைதளங்கள் வாயிலாக ஆள் சேர்ப்பதாக கொச்சியில் உள்ள தேசிய புலானாய்வு முகவைக்கு தகவல் கிடைத்தது.
இந்த விவகரம் தொடர்பாக, கோவை, ஜி.எம் நகரைச் சேர்ந்த அப்துல் ரகுமான், ஆசாத் நகர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த முகமது அப்துல்லா ஆகியோரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை இரவு விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, அவர்கள் இருவரையும் கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமையில் ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். இதைத்தொடர்ந்து, அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: அப்துல் ரகுமான் வேலை செய்யாமல் இருப்பதும், அவர்கள் சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளதாம். அவருக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கரும்புக்கடை பகுதியில் வாரம் ஒருமுறை 6 பேர் கொண்ட குழுவினர் கூடி, ஐ.எஸ் இயக்கத்தின் கொள்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, கோவையில் உள்ள உக்கடம், காந்திபுரம், கரும்புக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை என்.ஐ.ஏ அதிகாரிகள் இரண்டு குழுக்களாக திடீர் சோதனையை மேற்கொண்டனர். அப்போது, கரும்புக்கடை, பூங்கா நகரைச் சேர்ந்த வாசிம் கான்(24), சுந்தரபுரத்தைச் சேர்ந்த சதாம் உசேன்(25), கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சனோஃபர் அலி(23), கரும்புக்கடை, ஆசாத் நகரை சேர்ந்த தவ்ஃபிக் ரஹ்மான்(23), மற்றும் நிசார் அகமத் (32) ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
சனோஃபர் அலி மற்றும் சதாம் உசேன் ஆகியோர் புத்தகக் கடை நடத்தி வருகின்றனர். வாஷிம் கான், காலணி விற்பனை நிலையத்தில் மேனேஜராக பணிபுரிகிறார். தவ்ஃபிக் ரஹ்மான், டிஜிடல் ஃலெக்ஸ் பிரிண்டிங் சம்மந்தமாக காந்திபுரத்தில் வேலை செய்து வருகிறார். நிசார் அகமத், டயர் குடோனில் வேலை செய்து வருகிறார். அவர்களது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், திங்கள் கிழமை கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல, திருப்பூர் மாவட்டம் நல்லூர் அருகே உள்ள சேரன்காடு பகுதியில் டெக்ஸ்டைல் கடை ஒன்ரில் டெய்லாக பணிபுரிந்து வரும் அப்துல் ரசாத்திடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அவரையும் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ அலுவலத்தில் ஆஜர் ஆகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர்.