கடந்த ஆண்டு முதல் தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய வருமான வரித்துறை ரெய்டுகளின் லிஸ்ட் !

கடந்த ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை நடந்த ரெய்டு குறித்து பார்க்கலாம்.

By: Updated: November 9, 2017, 07:20:28 PM

சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்களுக்கு தொடர்புடைய இடங்களை குறிவைத்து, வருமான வரித்துறையினர் 180-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிரடி சோதனையை தொடங்கினர். கருப்பு பணத்தை ஒழிக்க வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக கூறப்பட்ட போதிலும், இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மத்திய பாஜக அரசும், தமிழக அரசும் இணைந்து கொண்டு தான், வருமான வரித்துறை மூலம் அச்சுறுத்துகின்றனர் என டிடிவி தினகரன் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதையே தான் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றச்சாட்டாக முன்வைக்கின்றனர்.

இந்த நிலையில், இதற்கு முன்னதாக தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை நடத்திய முக்கிய ரெய்டுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் சமயத்தில், அதிமுக பிரமுகர் கரூர் அன்புநாதன் வீட்டில் வரிமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதே சமயத்தில் தான், திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் ரூ. 570 கோடி கைப்பற்றப்பட்ட சம்பவமும் நடைபெற்றது.

கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். சுமார் 40 இடங்களில் சோதனை நடைபெற்றது.

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார்.  அந்த டிசம்பர் மாதத்திலேயே தமிழக அரசின் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர். முன்னதாக தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து ரூ.120 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் 167 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது.சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அவரது உறவினர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனைகளை நடத்தியது. முன்னதாக, மார்ச் மாதத்தில் சென்னை ஆர்.கே நகர் இடைத் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டபோது, பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், விஜயபாஸ்கருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்வதற்கான முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல் வெளியானது. 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

கடந்த அக்டோபர் மாதம் மெர்சல் விவகாரம் எழுந்த நிலையில், நடிகர் விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இது தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளிக்கையில், வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகு, செலுத்த வேண்டிய ரூ.50 லட்ச வரியை செலுத்தாதன் காரணமாகவே விஷாலின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், சமீபத்தில் மெர்சல் திரைப்படம் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கும் இந்த நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லையென்றும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குள்ளான மெர்சல் திரைப்படத்தை பாஜக-வின் தேசியச் செயலர் எச். ராஜா இணையத்தில் பார்த்ததாக ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்திருந்தார். எச். ராஜா கூறியது குறித்து விஷால் விமர்சனம் செய்திருந்த நிலையில், விஷால் அலுவலத்தில் ரெய்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:It dept raids jaya tv offices sasikala family members premises important income tax raid in tamilnadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X