அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து நடைமுறைக்கு வந்துள்ள விசா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் ஆட்குறைப்பில் ஈடுபட்டிருக்கின்றன. இதுகுறித்த தகவல்களை தமிழக ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும், வேலை நீக்கத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
அமெரிக்காவில் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப் மென்பொருள் நிறுவனங்களில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்தக் கூடாது என்றும், உள்நாட்டு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் என்றும் ஆணையிட்டார். இதற்கு வசதியாக இந்தியர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று பணி செய்ய வைப்பதற்கான விசா நிபந்தனைகளை கடுமையாக்கினார். இதனால் அமெரிக்காவில் அதிக ஊதியத்திற்கு உள்நாட்டு பணியாளர்களை பணியமர்த்த வேண்டிய கட்டாயம் ஒருபுறம், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கிடைத்து வந்த ஒப்பந்தங்களின் எண்ணிக்கை குறைந்தது மறுபுறம் என தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அடுத்தடுத்து கடும் நெருக்கடிகள் ஏற்பட்டன. அவற்றை சமாளிப்பதற்காக ஆட்குறைப்பு முயற்சியில் அவை தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றன.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட காக்னிசன்ட் நிறுவனம் இந்தியாவில் மட்டும் 55,000 பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானித்திருக்கிறது. இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளனர். பணி நீக்க நடவடிக்கை தொடரும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் குறைந்தது 10,000 பேர் வேலையிழப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. காக்னிசன்ட் நிறுவனத்தைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்யவிருப்பதால் அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான மென்பொருள் பணியாளர்கள் வேலை இழக்க வேண்டிய ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல்தொழில்நுட்ப பணியாளர் கூட்டமைப்பு கூறியுள்ளது.
அமெரிக்க அரசு காட்டும் கெடுபிடிகள் காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சில நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பது உண்மை தான் என்றாலும் கூட, அவை சமாளிக்க முடியாதவை அல்ல. இப்போதுள்ள பணியாளர்கள் அனைவரையும் வைத்துக் கொண்டே இந்த நெருக்கடியை வெற்றிகரமாக சமாளிக்க முடியும். ஆனால், மென்பொருள் நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்களின் செயல்திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்ள துடிப்பது தான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாகும். பென்பொருள் நிறுவனங்களால் பணி நீக்கப்படும் பணியாளர்களில் பெரும்பாலானோர் 40 வயதைக் கடந்தவர்கள் ஆவர். இவர்கள் மேலாளர், முதுநிலை மேலாளர், துணைத் தலைவர்கள் நிலையில் உள்ளவர்கள். இவர்களுக்கு லட்சக்கணக்கில் ஊதியம் வழங்கப்பட வேண்டியுள்ள நிலையில், இவர்களை நீக்கி விட்டு இளம் பட்டதாரிகளை குறைந்த ஊதியத்தில் பணியமர்த்துவதன் மூலம் பெருமளவில் செலவைக் குறைக்க முடியும் என்ற எண்ணம் தான் ஆட்குறைப்புக்கு முக்கிய காரணமாகும்.
40 வயதைக் கடந்த மூத்த பணி நிலையில் இருந்தவர்கள் பணி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அவர்களுக்கு வேறு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு ஆகும். தகவல் தொழில்நுட்ப பணிகளைப் பொறுத்தவரை இளம் வயதில் தினமும் 16 மணி நேரம் வரை பணியாற்றும் ஊழியர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் அதிக நேரம் உழைக்க முடியாது. ஆனால், இளம்வயதில் அவர்கள் உழைத்த உழைப்பைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஏற்ற பணிகளை வழங்கி தக்க வைத்துக் கொள்வது தான் அறம் ஆகும். மாறாக பணியாளர்களின் திறமைகளையும், சக்தியையும் உறிஞ்சி எடுத்துக் கொள்ளும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்களை சக்கையாக மாற்றி வீசி எறிகின்றன. எந்த வகையிலும் ஏற்க முடியாத இந்த அறமீறலை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.
தகவல்தொழில்நுட்ப பணியாளர் கூட்டமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் இரு தரப்பையும் அழைத்து பேசியுள்ளார். ஆனால், யாரையும் பணி நீக்கவில்லை என்றும், அவர்களாகவே பணி விலகுவதாகவும் காக்னிசன்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22-ஆம் தேதி அடுத்தக்கட்ட பேச்சு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என தகவல்தொழில்நுட்ப பணியாளர்கள் கூறுகின்றனர்.
ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் இதே சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அங்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் நேரடியாக சிக்கலைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அழைத்துப் பேசி ஒரு தகவல் தொழில்நுட்ப பணியாளர் கூட பணி நீக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.