தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள "உங்களில் ஒருவன்" சுயசரிதை புத்தக வெளியிட்டு விழாவில் பங்குபெற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்னைக்கு வருகை தந்தார்.
விழா முடிவடைந்தப்பின் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையிலுள்ள சத்யமூர்த்தி பவனில் உள்ளாட்சி தேர்தலில் பங்குபெற்று வெற்றிபெற்ற காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் உரையாட வருகைபுரிந்தார்.
இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி, பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப் பெருந்தகை உட்பட தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியபோது:
"உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பல விதத்தில் நம் ஆட்சிக்கு இதுவே மிக முக்கியமான வருடமாக இருக்கிறது. ஏனென்றால், இந்த முறை மக்களுக்கு நெருக்கமான சூழலில் அமைந்திருக்கிறது. மற்ற அமைச்சர்களைவிட உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் மட்டுமே மக்களின் தேவையை மிகவும் நெருக்கத்திலிருந்து புரிந்துகொள்ள முடியும்.
காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு மிக முக்கியமான மாநிலமாகும். என்னுடைய பாராளுமன்ற உரையில் பேசியிருப்பேன், இந்தியா என்பது மாநிலங்களின் ஒரு கூட்டமைப்பு, எல்லா மாநிலங்களுக்கும் அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள் இருக்கும்.
இந்தியாவில் வலிமையான காங்கிரஸ் கட்சி கட்டமைக்க வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் வலிமையான காங்கிரஸ் கட்சியாக நிற்க வேண்டும். இங்கு வலிமையான கட்சியை உருவாக்குவதற்கு, நாம் அனைவரும் நம் சித்தாந்தத்தில் வலுவாக நிற்க வேண்டும், எந்தவொரு சமரசமும் இல்லாமல்.
இந்த மாநிலத்தை பொறுத்தவரையில் திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வாய்த்த நமக்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறேன். இந்த கூட்டணியை வலிமைப்படுத்துவது நம் கடமையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தின் பெரும்பகுதி இங்கு அமர்ந்திருக்கும் பெண்களின் கையில் இருப்பதாகவும் உணர்கிறேன், அவர்களே தமிழ் பெண்களின் உரிமைகளை காக்கப்போகிறார்கள். நாம் 50 தமிழ் காங்கிரஸ் கட்சியினர்களை ஒரு அறையில் வைத்தால், அவர்களின் கருத்துக்கள் 500 காங்கிரஸ் கட்சியினர்களுக்கு சமமாக இருக்கும்." என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.