Advertisment

12 மணி நேரம்... 1800 அதிகாரிகள் : சசிகலா குடும்பத்தினரிடம் விடிய விடிய ரெய்டு Live Updates

ஜெயா டிவி அலுவலகத்தில் இன்று காலை ஐ.டி அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்துகிறார்கள். டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் இதர உறவினர்கள் வீடுகளும் தப்பவில்லை.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
jeya tv, aiadmk, vk sasikala, ttv dhinakaran, incom tax department

ஜெயா டிவி அலுவலகத்தில் இன்று காலை ஐ.டி அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்துகிறார்கள். டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் இதர உறவினர்கள் வீடுகளும் தப்பவில்லை.

Advertisment

ஜெயா டிவி அலுவலகம், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ளது. இன்று அதிகாலை 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயா டிவி அலுவலகத்தில் புகுந்தனர். அங்குள்ள ஆவணங்களை சோதனையிட்டு விசாரித்து வருகிறார்கள்.

சென்னை பெசன்ட் நகரில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இல்லம் உள்ளது. இங்கும் வருமான வரித்துறை படையெடுத்திருக்கிறது. இதேபோல சசிகலாவின் இதர உறவினர்கள், அவர்களின் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் புகுந்து அலசி வருகிறார்கள்.

இந்தச் சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

ஜெயா தொலைக்காட்சி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. அதிமுக.வின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக இயங்கி வந்தது. ஆரம்பம் முதல் சசிகலாவின் மேற்பார்வையில் அவரது உறவினர்களால் இது நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, டி.டி.வி.தினகரன் மேற்பார்வையில் இளவரசியின் மகன் விவேக் இதை நிர்வாகம் செய்து வருவதாக கூறுகிறார்கள். டி.டி.வி.தினகரன் தலைமையில் இயங்கி வரும் அதிமுக அம்மா அணிக்கு முக்கிய பிரசார சாதனமாக ஜெயா டிவி இயங்கி வருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையிலான அணிகள் இணைந்ததும், ஜெயா தொலைக்காட்சி மற்றும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஆகியன கட்சித் தொண்டர்களின் சொத்து. அவற்றை கைப்பற்றுவோம் என தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் அதற்கு டி.டி.வி.தினகரன் தரப்பில், ‘ஜெயா தொலைக்காட்சி தனியார் சொத்து. முடிந்தால் அதை கைப்பற்றிப் பாருங்கள்!’ என சவால் விட்டனர்.

இரட்டை இலை வழக்கில் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன், அதன்பிறகும் மத்திய அரசு மீது காட்டமான விமர்சனங்கள் வைப்பதை தவிர்த்தே வந்தார். மத்திய அரசை கடுமையாக விமர்சித்து நமது எம்.ஜி.ஆரில் கவிதை தீட்டிய அதன் ஆசிரியர் மருது அழகுராஜை வேலையை விட்டே தூக்கினார்கள். நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களுக்கும் மத்திய அரசை விமர்சிக்க வாய்க்கட்டு போடப்பட்டது.

நேற்று பண மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், ‘ஆரம்பத்தில் அது நல்ல நடவடிக்கையாக தெரிந்தாலும், அதனால் பாதிப்புதான் அதிகம்’ என கூறினார். ஓரிரு பாஜக தலைவர்கள் மூலமாக மத்திய அரசுடன் இணக்கம் பேண டிடிவி தினகரன் முயற்சித்து வந்ததாகவும் தகவல்கள் உண்டு.

இந்தச் சூழலில்தான் அதிரடியாக மத்திய அரசின் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயா டிவி மற்றும் சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் புகுந்து ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சசிகலா குடும்பத்தின் மீதான ஒவ்வொரு நடவடிக்கையையும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கையாகவே தமிழக மக்கள் பார்ப்பதாகவும், அது மத்தியில் ஆளும் பாஜக.வுக்கு தமிழகத்தில் நல்ல பெயரையே கொடுக்கும் என்றும் வட்டாரங்களில் கூறுகின்றனர்.

இரவு 8 மணி : விவேக் வீட்டில் விடிய விடிய சோதனை நடத்தப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரவு 7.30 : இளவரசி மகன் விவேக் இல்லத்தில் போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர்கள் விவேக் ஜெயராமன் வீட்டுக்கு விசாரணைக்கு வந்தனர்.

இரவு 7.00: இளவரசியின் மகன் விவேக் இல்லத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், விவேக்கின் மாமனார் பாஸ்கரின் பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரித்தனர். சோதனை முடித்து ஒரு பெண் அதிகாரி வெளியே வந்தபோது விவேக்கின் ஆதரவாளர்கள் மத்திய அரசுக்கும் முதல்வர் எடப்பாடிக்கும் எதிராக கோஷம் எழுப்பினர்.

மாலை 6.30 : சென்னை தி.நகரில் இளவரசியின் மகள் இல்லத்தில் 12 மணி நேரத்தைக் கடந்து சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், ஒரு லேப்-டாப்பை எடுத்துச் சென்றனர். அவரது தொண்டு நிறுவனம் தொடர்பான பண பரிவர்த்தனைகள் அதில் இருந்ததாக தெரிகிறது. சசிகலா பரோலில் வந்தபோது இந்த இல்லத்தில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாலை 6.00 : 12 மணி நேரத்தை கடந்து சசிகலா தொடர்பான 187 இடங்களிலும் சோதனை தொடர்ந்தது. வருமான வரித்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 800 பேர் இந்த ரெய்டில் இயங்கியதாக கூறப்பட்டது.

மாலை 5.00: சென்னை மகாலிங்கபுரத்தில் ஜெயா டிவி நிர்வாக அதிகாரியும், இளவரசியின் மகனுமான விவேக் இல்லத்தில் ரெய்டு நடத்திய அதிகாரிகள், விவேக்கிடம் வாக்குமூலம் பெற ஏற்பாடுகளை செய்தனர். சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாக தெரிகிறது.

மாலை 4.00: ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு ஐடி அதிகாரிகள் கெடுபிடி விதிப்பதாக கிளம்பிய தகவலைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து ஒளிபரப்பு நெருக்கடிகளை அதிகாரிகள் கைவிட்டனர்.

மாலை 3.15: கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைதான் இந்த ஐடி ரெய்டு என்றும், இதில் எந்த அரசியலும் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.

மாலை 3.00 : சசிகலா பெயரில் 4 போலி நிறுவனங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அவை தொடர்பாகவே இந்த ஐ.டி. ரெய்டு என வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

பிற்பகல் 1.20: கருணாநிதியின் குடும்பத்தினர் தொடர்பான ஆவணங்களை நான் அதிகாரிகளுக்கு கொடுத்திருக்கிறேன். அங்கு ஏன் ரெய்டு நடக்கவில்லை என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சுப்பிரமணியசுவாமியின் ட்வீட்...

பிற்பகல் 1.15 : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், ‘ஏற்கனவே முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்படபலரது இல்லங்களில் நடத்திய ரெய்டு என்ன ஆனது? அதே போன்ற ரெய்டுதானா இது? என்கிற கேள்வி எழுகிறது. தினத்தந்தியில் வருகிற கன்னித்தீவு போல இந்த ரெய்டு நடவடிக்கை இருக்கிறது. எனவே ஏற்கனவே நடத்திய ரெய்டுகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டுச் சொல்லவேண்டும்’ என்றார் ஸ்டாலின்.

பகல் 1.00 : சென்னையை அடுத்த படப்பையில் மிடாஸ் மதுபான ஆலை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

பகல் 12.30:    சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் செந்தில் பாலாஜி, வெற்றிவேல் உள்ளிட்டோர் டிடிவி தினகரனுடன் ஆலோசனை நடத்தினர்.

பகல் 12.00 : டிடிவி ஆதரவாளர்களில் ஒருவரான நடிகை சி.ஆர்.சரஸ்வதி அளித்த பேட்டியில், ‘மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை இது’ என குறிப்பிட்டார்.

காலை 11.30 : மன்னார்குடியில் சசிகலாவின் சகோதரர் திவாகரனை விசாரணைக்காக வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்படுவார் என தெரிகிறது.

காலை 10.45 : டிடிவி தினகரன் தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்தார். தனது இல்லத்திற்கு மாநில போலீஸும், ஒரு ஐ.டி அதிகாரியும் வந்ததாகவும், ஆனால் சோதனை நடத்தாமல் சென்றதாகவும் கூறினார். பாண்டிச்சேரியில் தனது பண்ணை வீடு ஒன்றில் ஐடி சோதனை நடத்தியதாகக் கூறிய டிடிவி தினகரன், 20 ஆண்டுகள் என்னை சிறையில் போட்டாலும் திரும்பவும் வந்து அரசியலில் ஈடுபடுவேன் என்றார்.

காலை 10.20 : சசிகலாவின் பரந்துபட்ட உறவு வட்டாரங்கள், அவர்களின் வழக்கறிஞர்கள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகத்தில் மொத்தம் 187 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து அலசினார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் வருமான வரித்துறை நடத்திய மெகா ரெய்டாக இதை வர்ணிக்கிறார்கள். ‘இந்த ரெய்டுகளை கவரேஜ் செய்யணும்னா 100 யூனிட்களாவது வேணும்போல; என டிவி நிருபர் ஒருவர் சொன்ன வார்த்தைகள், இந்த ரெய்டின் நீள அகலத்தை புரிய வைத்தது.

காலை 10:05 - முதல்வர் அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்பி அளித்துள்ள பேட்டியில், "முறையாக யார் வருமான வரி செலுத்தாவிடினும், அவர்கள் வீட்டில் ரெய்டு நடத்தப்படுவது வழக்கம் தான். இரட்டை இலை சின்னம் விவகாரத்திற்கும், இந்த ரெய்டுக்கும் எந்த தொடர்புமில்லை" என்றார்.

காலை 10:00 - நாமக்கலில் உள்ள சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீட்டிலும் வருமான வரி சோதனை. கோவையில் மணல் குவாரிகளை குத்தகை எடுத்து நடத்தி வந்த ஆறுமுகசாமி அலுவலகத்தில் வருமான வரி  சோதனை. கோடநாடு பங்களாவில் மரவேலை பார்த்துவந்த சஜிவனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

publive-image தி.நகரில் உள்ள இளவரசி வீட்டிலும் ரெய்டு

காலை 09:30 - மன்னார்குடியில் உள்ள திவாகரனுக்குச் சொந்தமான செங்கமலத் தாயார் கலை அறிவியல் கல்லூரியிலும் சோதனை.

காலை 09:10 - சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகத்திலும் அதகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

காலை 09:00 - தஞ்சை அருளானந்த நகரில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை.

காலை 08:52 - சென்னை அடையாற்றில் உள்ள தினகரன் வீட்டிற்கு தற்போது போலீசார் வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து வந்த ஒரேயொரு வருமான வரித்துறை அதிகாரி, தினகரன் வீட்டில் சோதனை நடத்தி வருகிறார்.

காலை 08:44 - தஞ்சையில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகாதேவன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை.

காலை 8:20 - தஞ்சை புதுக்கோட்டை சாலையிலுள்ள சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர்.வெங்கடேஷ் வீட்டிலும் சோதனை. திருவாரூர் மாவட்டம் கீழதிருப்பாலக்குடியில்  உள்ள திவாகரனின் உதவியாளர் விநாயகம் வீட்டிலும் சோதனை.

காலை 8:17 - பெங்களூருவில் உள்ள தினகரன் ஆதரவாளர் புகழேந்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

காலை 8:10 - மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கச் செல்லும் கோடநாடு எஸ்டேட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை. மன்னார்குடி சுந்தரகோட்டையில் உள்ள சசிகலா சகோதரர் திவாகரன் வீட்டில் சோதனை. மன்னார்குடி  மன்னை நகரில் உள்ள தினகரன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை. ஒட்டுமொத்தமாக, ஜெயா டிவி, இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா வீடு, நமது எம்ஜிஆர் அலுவலகம், டிடிவி தினகரன் வீடு, தினகரன் ஆதரவாளர் புகழேந்தி வீடு, ஜாஸ் சினிமாஸ், விவேக் வீடு, கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடத்தி வருகிறது. 100க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

 

 

Ttv Dhinakaran Vk Sasikala Jeya Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment