போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் ரெய்டு : இரவில் புகுந்தது ஐ.டி., போலீஸுடன் மோதிய தொண்டர்கள் கைது

சென்னை போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் இரவில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்துகிறார்கள். இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

சென்னை போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் இரவில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தினர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் இருக்கிறது. கடந்த 28 ஆண்டுகளாக தமிழக அரசியலை நிர்ணயிக்கும் மையமாக இருந்த இல்லம் இது! இன்று (17-ம் தேதி) இரவு 9 மணியளவில் இங்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் பாதுகாப்பு போலீஸார் துணையுடன் உள்ளே புகுந்தனர். ஏற்கனவே சசிகலா தரப்பு கட்டுப்பாட்டில் இருந்து போயஸ் கார்டன் இல்லம் அரசு வசம் கொண்டு வரப்பட்டுவிட்டது. எனவே இந்த சோதனைக்கு அங்கு எந்த எதிர்ப்பும் இல்லை.

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் அவரது உதவியாளர் பூங்குன்றனின் அலுவலகம் இருக்கிறது. அதை குறி வைத்தே வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வி.கே.சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போதும் பூங்குன்றனிடம் விசாரணை நடந்தது. அதன் தொடர்ச்சியாக இதை குறிப்பிடுகிறார்கள்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் ரெய்டு live updates

இரவு 12.00 : போலீஸாரின் கடும் நடவடிக்கையை தொடர்ந்து தொண்டர்களின் போராட்டம் கட்டுக்குள் வந்தது. நள்ளிரவைத் தொடர்ந்தும் ஐ.டி. ரெய்டு தொடர்ந்தது.

இரவு 11.45: போயஸ் இல்ல சோதனையில் ஒரு லேப் டாப்பும், இரு பென் டிரைவ்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் கூறப்பட்டது.

இரவு 11.30 : வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனையோ, அதிமுக நிர்வாகிகளையோ போயஸ் கார்டன் இல்லத்திற்குள் போலீஸார் விடவில்லை. தொண்டர்கள் சிலர் அத்துமீறி உள்ளே புக முயன்றபோது அவர்களை போலீஸார் தடுத்து கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர்.

இரவு 11.20 : சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் அங்கு வந்தார். ‘ஒரு ரெய்டு நடந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டியது நடைமுறை. அந்த அடிப்படையில் யாருக்கு தகவல் கொடுத்தார்கள் என தெரியவில்லை. ஒரு வழக்கறிஞராக என்னை அனுமதிக்க கோரியிருக்கிறேன்’ என்றார்.

இரவு 11.15 : போயஸ் கார்டன் இல்லத்தில் பூங்குன்றன் அறையிலும் சசிகலா அறையிலும் மட்டுமே சோதனை நடத்துவதாக தொண்டர்களிடம் போலீஸார் சமரசம் செய்தனர். ஆனால் தொண்டர்கள் அதை ஏற்காமல் மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக கோஷம் எழுப்பினர்.

இரவு 11.00 : தொண்டர்கள் எண்ணிக்கை அதிகமானது. போயஸ் கார்டன் ரெய்டைக் கண்டித்து கோஷம் எழுப்பிய தொண்டர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் உள்ளே நுழைய முயன்று போலீஸாருடன் மோதிக்கொண்டனர்.

இரவு 10.50 : தொண்டர்கள் பெருமளவில் கூடி, வருமான வரித்துறைக்கு எதிராக கோஷமிட்டனர்.

இரவு 10.35 : போயஸ் கார்டன் இல்லம் எங்களுக்கு கோவில், தமிழகம் கொந்தளிக்கும் என எச்சரித்தார் அவர்.

vp kalairajan - poesgarden - itraid
இரவு 10.30 : டிடிவி தினகரன் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்டச் செயலாளருமான வி.பி.கலைராஜன் வந்தார். போயஸ் கார்டன் இல்லத்திற்குள் அனுமதிக்கும்படி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் போலீஸ் விடவில்லை.

vivek jayaraman - poes garden - itraid
இரவு 10.20 : போயஸ் கார்டன் இல்லத்திற்குள் சசிகலா குடும்பத்தினர் செல்வதை நிறுத்தினாலும், பல அறைகளின் சாவி இளவரசி குடும்பத்தினரிடம் இருந்தது. எனவே ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக்கை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்தனர். அவர் சாவிகளுடன் வந்தார். பூங்குன்றனும் அழைத்து வரப்பட்டார்.

poess garden - it raids
இரவு 10.15 : அதிமுக தொண்டர்கள் போயஸ் கார்டன் இல்லம் வர ஆரம்பித்தனர். அவர்களை வீட்டின் அருகே செல்ல விடாமல் பிரதான சாலையில் போலீஸார் தடுத்தனர்.

10.00 : வருமான வரித்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘ஜெயலலிதாவின் இல்லத்தில் சோதனை போட நீதிமன்ற அனுமதியுடன் வந்திருப்பதாக’ கூறினர். சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு இரவில் சோதனை போடுவதாக கூறினர்.

9.45: செய்தியாளர்கள் அங்கு குவிந்தனர். போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘சசிகலா குடும்பத்தினரின் வீடுகளில் நடந்த ரெய்டின் தொடர்ச்சி’ என்றார்கள்.

இரவு 9.30 : வருமான வரித்துறையின் 3 அதிகாரிகள் அங்கு வந்தனர்.

இரவு 9.00 : போயஸ் கார்டனில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close