இன்று விடியற்காலை முதல் சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் ஜெயா டிவி அலுவலகத்தில் தொடங்கி, 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல இடங்களில் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகாலவிற்கு தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி ஆகிய அனைத்து பகுதிகளிலும் வீடுகள் உள்ளது. இம்மாவட்டங்களில் பல இடங்களில் அவருக்கு சொத்துகளும் உள்ளது. சசிகலா மட்டுமல்லாமல், அவரது கணவர் நடராஜன் உட்பட உறவினர்கள் அனைவருக்கும் தஞ்சை, திருவாரூர், மன்னார்குடி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் பல்வேறு சொத்துகள் உள்ளன.
இந்த நிலையில், அவையனைத்திலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் மட்டும் 11 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மன்னார்குடியில் உள்ள தினகரன் வீட்டில் ஐந்து ஐடி அதிகாரிகளும், திவாகரன் வீட்டில் 6 ஐடி அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், மன்னார்குடியில் உள்ள திவாகரனுக்குச் சொந்தமான செங்கமலத் தாயார் கலை அறிவியல் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுமட்டுமில்லாமல், சசிகலா உறவினர்கள் ரியல் எஸ்டேட், கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல வியாபாரங்களை தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் செய்து வருகின்றனர். இவையனைத்திலும் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. தஞ்சை அருளானந்த நகரில் திவாகரன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், தஞ்சையில் நடராஜனுக்கு சொந்தமான கலையரசி திருமண மண்டபத்திலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், கறுப்புப் பண ஒழிப்பின் ஒரு பகுதியாக இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும், பத்து குழுமங்களுக்குச் சொந்தமான போலி நிறுவனங்களை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது எனவும் கூறியுள்ளனர்.
குறிப்பாக, சுரானா, சுனில், புதுச்சேரி ஸ்ரீலட்சுமி, விண்ட் சுப்ரமணியன் ஆகியோருக்கு தொடர்புடைய நிறுவனங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. இந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் சசிகலாவின் உறவினர்கள் என்றும், சிலர் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.