ஊழல் இராஜ்யத்தின் அதிபதியான சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், அவரது தளபதிகளாக விளங்கிய எடப்பாடி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு தவறான வழிகளில் அவர்கள் குவித்த ஊழல் சொத்துக்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சசிகலா, அவரது உறவினர்கள் மற்றும் பினாமிகளின் வீடுகள், அலுவலகங்கள் என நாடு முழுவதும் 187 இடங்களில் கடந்த 4 நாட்களாக வருமானவரி சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. 1800-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ள இந்த சோதனையில் கோடிக்கணக்கில் பணம், நகை, வைரம், சொத்துப்பத்திரங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் போதிலும், அது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வருமானவரித்துறை இப்போது வரை வெளியிடப்படவில்லை.
வருமானவரித்துறையில் பணம், நகை, சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டிருக்கலாம் அல்லது இல்லாமலும் போயிருக்கலாம். அது குறித்த தகவல்களை வருமானவரித்துறை வெளியிடலாம் அல்லது வெளியிடாமலும் போகலாம். அவையெல்லாம் வருமானவரித்துறையின் திறமை மற்றும் நேர்மை சார்ந்த விஷயங்கள் ஆகும். எது எப்படியிலிருந்தாலும் சசிகலா குழுவினர் எத்தனை ஆயிரம் கோடி சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர், எந்தெந்த வழிகளில் சொத்துக்களைக் குவித்தனர், எந்தெந்த நாடுகளில் அவர்களின் பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் நாடறிந்த ரகசியம் தான்.
சசிகலாவும், டிடிவி தினகரனும் கடந்த இரு வாரங்களாகத் தான் தவறான வழிகளில் போலி நிறுவனங்கள் மூலம் சொத்துக்களை வாங்கிக் குவிப்பது போன்றும், அது குறித்த விவரங்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் மத்திய அரசுக்கு தெரிந்தது போன்றும், அதனடிப்படையில் தான் கடந்த 3 நாட்களாக சசிகலா மற்றும் அவரது பினாமிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் நடத்தப்படுவது போலவும் தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்வது மக்களை ஏமாற்றும் செயலாகும்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த நாளில் தொடங்கி கடந்த 27 ஆண்டுகளாக சசிகலா குடும்பம் தமிழகத்தை கொள்ளையடித்தும், சுரண்டிக்கொண்டும் தான் இருக்கிறது. சசிகலாவின் குடும்பம் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகக்கூட கொள்ளையடிக்கவில்லை. 16 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் முழு ஆதரவுடன் தான் சசிகலா குடும்பத்தினர் தமிழ்நாட்டைக் கொள்ளையடித்தனர்.
கடந்த காலங்களில் சசிகலாவும் அவரது குழுவினரும் சொத்துக்களை வாங்கிக் குவித்ததெல்லாம் மத்திய அரசுக்கு தெரியாமல் நடந்துவிடவில்லை. சென்னை வேளச்சேரியில் சத்யம் குழுமத்திற்கு சொந்தமான 11 திரைகள் கொண்ட லக்ஸ் திரையரங்க வளாகத்தை சசிகலாவுக்கு சொந்தமான ஜாஸ் நிறுவனம் மிரட்டிப் பறித்தது.
ஜெயலலிதாவுக்கு பயந்து வேடிக்கை
இந்த திரையரங்கம் ரூ.1000 கோடிக்கு வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு சில லட்சங்களை முதலீடாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஜாஸ் சினிமா நிறுவனத்தால் இவ்வளவு அதிக சொத்துக்களை எப்படி வாங்க முடியும்? என பாட்டாளி மக்கள் கட்சியும், பிற கட்சிகளும் வினா எழுப்பிய போது, அது குறித்து விசாரணை நடத்தியிருக்க வேண்டிய வருமானவரித்துறை அப்போது ஜெயலலிதாவுக்கு பயந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததே தவிர நடவடிக்கை எடுக்கவில்லை. சசிகலா மேலும் பல சொத்துக்களை வாங்கிக் குவித்த போதும், அவற்றை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததன் மூலம், அவற்றுக்கெல்லாம் வருமானவரித்துறை உதவியாகவே இருந்தது.
ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகும்.
1991-96 ஆட்சிக் காலத்தில் கண்ணில் பட்ட இடங்களையெல்லாம் ஜெயலலிதா ஆசியுடன் சசிகலா வளைத்தார். அமைச்சர்களுக்கு இலக்கு நிர்ணயித்து ஊழல் பணத்தை வசூலித்தார். கொடநாடு தேயிலைத் தோட்டம், சிறுதாவூர் மாளிகை, பையனூர் மாளிகை உள்ளிட்ட சொத்துக்கள் இந்தக் காலத்தில் வளைக்கப்பட்டவை தான்.
அந்தக் காலத்தில் ஊழல் மூலம் குவிக்கப்பட்ட சொத்துக்களில் ஒரு பகுதி மட்டுமே கையூட்டுத் தடுப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. சசிகலாவும் அவரது உறவினர்களுக்கு இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கான அந்த வழக்கில் சிக்கிய சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பு மட்டும் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகும். அதற்கு பிந்தைய 10 ஆண்டுகளில் அதைவிட 100 மடங்கு சொத்துக்களை அவர்கள் சேர்த்துள்ளனர். சசிகலாவின் உறவினர் தினகரன் மூலமாக உலகம் முழுவதும் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர்.
அரசியல் நாடகத்தின் இருட்டு அத்தியாயம் தான்.
சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் ஊழல் செய்து குவித்து வைத்துள்ள பணம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு பல லட்சம் கோடிகளாகும். அவற்றை அவர்கள் தனியாக குவித்து விடவில்லை. இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக செயல்படும் இரு உத்தமர்களில் முதலாமவரான ஓ.பன்னீர்செல்வம் தான் சசிகலாவின் முதன்மை முகவராக இருந்து கையூட்டு வசூலித்துக் கொடுத்தார்.
அதற்கான பரிசாகத் தான் அவருக்கு 3 முறை முதலமைச்சர் பதவி கிடைத்தது. கையூட்டு வசூலித்துக் கொடுப்பதில் அவரை விட அதிக விசுவாசம் காட்டியதால் தான் இரண்டாவது உத்தமரான எடப்பாடி பழனிச்சாமிக்கு இப்போதைய பதவி வெகுமதியாகக் கிடைத்தது. இப்போது சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் மட்டும் தான் குற்றவாளிகள் போலவும், அவர்களின் ஊழல் முகவர்களான எடப்பாடியும், பன்னீர்செல்வமும் அரிச்சந்திரனின் அடுத்த வாரிசுகள் போலவும் தோற்றம் ஏற்படுத்தப்படுவது அரசியல் நாடகத்தின் இருட்டு அத்தியாயம் தான்.
ஊழல் இராஜ்யத்தின் அதிபதி சசிகலா
2011-16 ஆட்சிக் காலத்தில் தான் ஊழல் பூதம் உச்சக்கட்டத்தில் ஆட்டமாடியது. அதை ஆட்டுவித்தவர்கள் சசிகலாவும், அந்த ஆட்சியில் மூத்த அமைச்சர்களாக இருப்பவர்களும் தான். அந்த ஆட்சியின் தொடக்கத்தில் தமிழக அரசின் நேரடிக்கடன் ரூ.1.01 லட்சம் கோடியாகத் தான் இருந்தது. இப்போது ரூ.3.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இடைப்பட்டக் காலத்தில் அணைகள், தடுப்பணைகள், கல்லூரிகள், பாசனத் திட்டங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படாத நிலையில், கடனாக வாங்கப்பட்ட நிதி முழுவதும் ஊழல் வழியில் சசிகலா மற்றும் அமைச்சர்கள் குடும்பங்களிடம் சேர்க்கப்பட்டிருக்கிறது.
ஊழல் இராஜ்யத்தின் அதிபதியான சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், அவரது தளபதிகளாக விளங்கிய எடப்பாடி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு தவறான வழிகளில் அவர்கள் குவித்த ஊழல் சொத்துக்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். அவர்கள் மீது கையூட்டுத் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதற்கு முன்பாக ஊழல் பணத்தில் உருவாக்கப்பட்ட பினாமி அரசு ஒரு நிமிடம் கூட நீடிக்கக்கூடாது.
திமுகவும் தப்பி விட முடியாது
தமிழகத்தின் வளங்களையும், வருவாயையும் கரையான்களாக மாறி அரித்த பாவத்திலிருந்து திமுகவும் தப்பி விட முடியாது. இன்னும் கேட்டால் 45 ஆண்டுகளுக்கு முன், திமுக வகுத்துக் கொடுத்த பாதையில் பயணித்து தான் சசிகலா உள்ளிட்ட அதிமுகவினர் ஊழல் செய்கின்றனர். சர்க்காரியா ஆணையம் அளித்த அறிக்கையை வாசித்தாலே, இன்றைய ஊழல்களுக்கெல்லாம் வழிகாட்டி திமுக தான் என்பது புரியும்.
சசிகலா இன்று வேண்டுமானால் சிறையில் இருக்கலாம். அவரது குடும்பம் இப்போது வேண்டுமானால் அதிகாரத்திலிருந்து தொலைவில் இருக்கலாம். ஆனால், வாய்ப்புக் கிடைத்தால் ஊழலால் அரிக்கப்பட்டது போக மீதமுள்ள தமிழகத்தை ஒரே நாளில் கபளீகரம் செய்யும் திறன் அக்குடும்பத்திற்கு உண்டு. தமிழகத்தை இப்போது ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும், நாளை உலகம் அழியும் முன் இன்றே ஊரைச் சுருட்ட வேண்டும் என்ற வேகத்தில் ஊழல் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் வழிகாட்டியான திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றிக் கூற வேண்டியதில்லை.
மக்களின் வரிப்பணம் தான்
வருமான வரி சோதனை நடத்தி, அதில் கண்டுபிடிக்கப்படும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களுக்கு தண்டம் விதித்து அவற்றை சட்டப்பூர்வ சொத்துக்களாக மாற்ற அனுமதிக்கக்கூடாது. ஊழல் மூலம் குவித்த சொத்துக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவற்றை மீட்டு வர வேண்டும். ஏனெனில், தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஊழல் மூலம் சுரண்டப்பட்டது முழுவதும் மக்களின் வரிப்பணம் தான்.
அந்த பணம் மீண்டும் அவர்களுக்கே சென்று சேர வேண்டும். அதற்காக, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் அரசை உடனடியாக அகற்ற வேண்டும். கடந்த காலங்களில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி, கொள்ளையடிக்கப்பட்ட மக்களின் வரிப் பணத்தை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார் ராமதாஸ்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.