தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் ஒரே நாளில் சசிகலா குடும்பத்தினரின் 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறித்து தலைவர்களின் கருத்து இங்கே...
வி.கே.சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 187 இடங்களில் இன்று (நவம்பர் 9) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து அரசியல் தலைவர்களின் கருத்துகள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கிறது.
மு.க.ஸ்டாலின் (திமுக செயல் தலைவர்):
தினத்தந்தியில் வருகிற கன்னித்தீவு கதை போல தமிழகத்தில் ரெய்டு நீண்டு கொண்டிருக்கிறது. ஏற்கனவே நடந்த ரெய்டுகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடம் அல்லது அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்கள் கேட்டுச் சொன்னால், இந்த ரெய்டு பற்றி நான் விளக்கம் கூறுகிறேன்.
தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் தலைவர்):
அதிமுக.வில் நிலவும் உட்கட்சிப் பூசலை அதிகப்படுத்தும் நோக்குடன் மத்திய அரசு தூண்டுதலில் இந்த ரெய்டு நடக்கிறது.
ஜி.கே.வாசன் (த.மா.கா. தலைவர்):
இப்போதைய அரசியல் சூழல் காரணமாக இந்த ரெய்டு தொடர்பாக சந்தேகம் எழுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழிசை செளந்தரராஜன் (பாஜக தமிழக தலைவர்)
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கான அறுவை சிகிச்சை இது. இதில் எந்த அரசியலும் இல்லை.
தா.பாண்டியன்(இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்):
ரெய்டில் உள்ளே இருப்பதையும் பிடிக்கலாம். உள்ளே வைத்தும் பிடிக்கலாம். கடைசியில் மக்கள் தீர்ப்புதான் முக்கியம். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். இதை மோடியும் இங்குள்ள அவரது பஜனை பாடிகளும் உணரும் நாள் வரும்.
சீமான் (நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்):
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது இருந்த ஜெயா தொலைக்காட்சிதான் இப்போதும் இருக்கிறது. திடீரென அவங்களுக்கு வருமானம் அதிகமா வந்துவிட்டதா? அப்போ இதில் அரசியல் இல்லை என எப்படி சொல்ல முடியும்? மத்திய அரசின் அச்சுறுத்தும் வேலை இது.
வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)
அரசியல் பேரங்களுக்காக மோடி அரசின் மிரட்டல் நடவடிக்கை இது.
இவ்வாறு கருத்து கூறியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.