அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் வருமான வரித்துறை சோதனை… ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது: தங்க தமிழ்ச்செல்வன்

அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது என தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு

By: Updated: November 9, 2017, 11:36:43 AM

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது என்றும், இதற்கு காரணமானவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். சசிகலாவின் மற்றும் டிடிவி தினகரன் உறவினர்கள், வீடுகள், நிறுவனங்கள் என 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வருமான வரித்துறை சோதனையானது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்டுவதாக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

வருமான வரித்துறை சோதனை குறித்து டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறும்போது: டி.டி.வி. தினகரன், திவாகரன் குடும்பத்தினர் வீடுகள், ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாமல் இதுபோன்ற சோதனைகள் நடக்க வாய்ப்பில்லை. துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் தூண்டுதலின் பேரில் தான் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

ஜெயா டிவி என்பது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் தொடங்கப்பட்டதாகும். இந்த தொலைக்காட்சியில் பெயர் வராதா என ஏங்கியவர்கள் ஏராளம். ஆனால், தற்போது ஜெயா டிவி அலுவலகத்திலேயே வருமான வரி அதிகாரிகளை வைத்து சோதனை நடத்துகின்றனர். அதிகார மமதையில் செயல்பட்டு வரும் இவர்கள், அரசு அதிகாரத்தை தவறான நோக்கத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.

கருப்பு பணத்தை கண்டறியும் வகையில் சோதனை நடத்துவதாக வருமான வரித்துறையினர் தெரிவிக்கின்றனர். மணல் மாபியா சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தியபோது, அங்கு டைரியை கைப்பற்றினார்கள். ஆனால், அந்த டைரியில் இடம்பெற்றவர்களின் வீடுகளில் சோதனை நடத்தாதது ஏன்?

இதேபோல் கரூர் அன்புநாதன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெறாதது ஏன்? இதற்கு வருமான வரித்துறை விளக்கம் அளிக்க தயாரா?

வருமான வரித்துறை அதிகாரிகளால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனையானது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி நிறைந்ததாகும். இதனை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது. அதிமுக தொண்டர்களும் இதனை மன்னிக்க மாட்டார்கள் என்று கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:It raids at premises of jaya tv sasikala family temptation of cm eps and deputy cm ops blames thanga tamil selvan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X