ஐ.டி. விசாரணை ஜரூர்: சசிகலா அண்ணன் மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆஜர்

வி.கே.சசிகலா குடும்பத்தினர் மீதான வருமான வரி துறை விசாரணை ஜரூராக நடக்கிறது. இன்று சசிகலாவின் அண்ணன் மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆஜரானார்கள்.

வி.கே.சசிகலா குடும்பத்தினர் மீதான வருமான வரி துறை விசாரணை ஜரூராக நடக்கிறது. இன்று சசிகலாவின் அண்ணன் மகள்கள் கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆஜரானார்கள்.

வி.கே.சசிகலாவின் உறவு வட்டாரம் தொடர்பான 187 இடங்களில் நவம்பர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியிருக்கிறார்கள்.

அடுத்தகட்டமாக அந்த ஆவணங்கள் குறித்து சசிகலா உறவினர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்து வருகிறது வருமான வரித்துறை! முதல் கட்டமாக கடந்த 13-ம் தேதியே டிடிவி தினகரன் ஆதரவாளரும் அதிமுக கர்நாடக மாநில செயலாளருமான புகழேந்தி, ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன், ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு அலுவலகத்திற்கு அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இன்று (நவம்பர் 15) சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் கிருஷ்ணபிரியா, இவரது சகோதரி ஷகிலா ஆகியோரை வருமான வரித்துறையின் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்தனர். அதன்படி கிருஷ்ணபிரியாவும் ஷகிலாவும் இன்று பகல் 11.30 மணிக்கு நுங்கம்பாக்கம் அலுவலகம் வந்தனர். அவர்களிடம் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் ஐ.டி. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரித்தனர்.

கிருஷ்ணபிரியா, சசிகலாவி அண்ணன் மகள் மட்டுமல்ல, சிறையில் சசிகலாவுடன் இருக்கும் இளவரசியின் மகள்! தவிர, ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமனின் சகோதரி! ஜெயலலிதாவின் கடைசி காலகட்டத்தில் இளவரசி குடும்பத்தினர் மீதே மிகுந்த கரிசனம் கொண்டிருந்தார். சசிகலாவும் தனது மற்ற உறவுகளைவிட, கணவரை இழந்தவரான இளவரசி மீது அதீத பாசம் கொண்டிருந்தார்.

பல் சொத்துக்களில் விவேக் ஜெயராமன், கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆகியோரின் பெயர்கள் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் ஐ.டி அதிகாரிகளின் பிரதான விசாரணை விவேக் ஜெயராமன், கிருஷ்ணபிரியா, ஷகிலா என இளவரசி குடும்பத்தினரையே சுற்றிச் சுழல்கிறது.

ஜெயா டிவி மேலாளர் நடராஜனையும் இன்று நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு ஐ.டி. அதிகாரிகள் வரவழைத்தனர். அவரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது. ஏற்கனவே விவேக் ஜெயராமனிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் நடராஜனிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சசிகலா உறவு வட்டாரத்தை சேர்ந்த பலரையும் இதேபோல அழைத்து விசாரிக்க ஐ.டி முடிவு செய்திருக்கிறது.

 

×Close
×Close