சசிகலா, டிடிவி தினகரன் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது அவர் கூறும்போது: வருமான வரிசோதனையின் போது ஏதேனும் கிடைக்கவில்லை என்றால் அது வேறு விஷயம். ஆனால், இந்த சோதனையின் போது நிகழ்ந்தவை குறித்து ஊடகங்களில் பக்கம் பக்கமாக செய்திகள் வெளிவருகின்றன.
1000 கோடி வரிஏய்ப்பு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இந்த தாமதத்திற்கு காணரம் என்ன?
வருமான வரித்துறை என்பது தனி அதிகாரம் படைத்த அமைப்பு. யார் கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாது.
முன்னதாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை குறித்து தொடர் நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?
சோதனை நடத்தப்பட்டது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு தான் வருகின்றனர். அனைத்திற்கும் கால அளவு உள்ளது. சில தலைவர்கள் சோதனை குறித்து நடவடிக்கை இல்லை என தவறாக நினைத்து வருகின்றனர்.
குறிவைத்து நடத்தப்படும் சோதனை என்று கூறப்படுகிறதே?
மற்ற மாநிலங்களில் பாஜக-வை சேர்ந்தவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டிருக்கின்றன. இங்கு ஏன் அவ்வாறு நடத்தப்படவில்லை என்பதை, வருமான வரித்துறையினரிடம் தான் கேட்க வேண்டும்.
அரசிலை விட்டு விரட்டுவதற்காக பாஜக நடத்தும் சதி என டிடிவி தினகரன் கூறியிருப்பது குறித்து?
கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறன்றன. இது தொடர்பாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என எவ்வாறு கூறமுடியம்? அரசியலுக்காக எந்த வித சோதனையும் மேற்கொள்ளவில்லை. அதில் எந்தவித தலையீடும் பாஜக-விற்கு இல்லை என்று கூறினார்.