அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை முடக்க வருமான வரித்துறை கடிதம் அனுப்பியுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் சசிகலா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் சசிகலா புதுக்கோட்டையிலிருந்து, விருதுநகர் மாவட்ட பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரி உள்பட சொத்துகளை முடக்க வேண்டும் என வருமானவரித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் தரப்பினர் கோடிக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களா, எழும்பூரில் உள்ள சகோதரி வீடு உள்ளிட்ட அவருடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, விஜயபாஸ்கரின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் வீடு மற்றும் அலுவலகம், மேட்டுச்சாலையில் உள்ள மதர்தெரசா கல்வி நிறுவனங்கள், திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரி ஆகிய இடங்களும் சோதனையில் தப்பவில்லை.
மேலும், இலுப்பூர் வீடு, கல்வி நிறுவனங்கள், குவாரி ஆகிய இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த விவகாரம் தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் அவ்வப்போது விசாரணைக்கு ஆஜராகி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று வருமானவரித்துறையினர் விஜயபாஸ்கரின் திருவேங்கைவாசல் குவாரி அமைந்துள்ள 100 ஏக்கர் நிலம் மற்றும் இதர சொத்துகளை முடக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இது தொடர்பான கடிதத்தை புதுக்கோட்டை மாவட்ட சார்பதிவாளருக்கு அனுப்பியிருந்தனர். இந்நிலையில், புதுக்கோட்டை பதிவாளர் சசிகலா புதுக்கோட்டையிலிருந்து, விருதுநகர் மாவட்ட பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சரின் சொத்துகளை முடக்க வருமான வரித்துறையினர் கடிதம் அனுப்பிய நிலையில், புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் மாற்றப்பட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.