ஜெ.தீபா அணியினர் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் தங்களுக்குள் முட்டிக்கொண்ட தகவல் வெளியாகியிருக்கிறது. ‘டிடிவி-யின் ஸ்லீப்பர் செல் வேலை இது’ என தீபா கூறினார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்கிற வழக்கு டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. ஆரம்பத்தில் சசிகலா-டிடிவி தினகரன் தரப்பு ஒரு அணியாகவும், மதுசூதனன் – ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு அணியாகவும் இங்கு அபிடவிட்களை கொண்டு போய் குவித்தனர்.
ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் இரட்டை இலைக்கு உரிமை கோரி களத்தில் குதித்தார். இதற்காக, எம்ஜிஆர்-அம்மா-ஜெ.தீபா பேரவை’ என்கிற தனது அமைப்பின் பெயரை ‘அதிமுக ஜெ.தீபா அணி’ என மாற்றினார். ஜெ.தீபா, அதிமுக-வில் உறுப்பினர் இல்லை. எனவே தனது அணி சார்பில் மதுரையைச் சேர்ந்தவரும் தீபா அணியின் செய்தி தொடர்பாளருமான வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் மூலமாக அபிடவிட்களை தாக்கல் செய்தார்.
சசிகலா தரப்பு 7 லட்சம் அபிடவிட்களையும், ஓபிஎஸ் தரப்பு 3 லட்சம் அபிடவிட்களையும் தாக்கல் செய்திருந்தனர். தீபா தரப்பிலுல் ஐந்தரை லட்சம் அபிடவிட்கள் தாக்கல் செய்திருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே ஜெ.தீபா அணி சார்பில் அபிடவிட் தாக்கல் செய்த பசும்பொன் பாண்டியனுக்கும், தீபாவுக்கும் சமீப நாட்களாக கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஜெ.தீபாவின் தி.நகர் இல்லத்திற்கு செல்வதையும் தவிர்த்து வருகிறார் பசும்பொன் பாண்டியன்.
இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த 6-ம் தேதி டெல்லியில் இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கை தேர்தல் ஆணையர்கள் விசாரித்தனர். அப்போது ஜெ.தீபா அணியினர் சார்பில் அபிடவிட்களை தாக்கல் செய்திருந்த பசும்பொன் பாண்டியனும் அங்கு சென்றிருந்தார்.
இரட்டை இலைக்காக சசிகலா தரப்பும், இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பும் காரசாரமாக மோதிக்கொண்டிருந்த அந்த வேளையில், புதிதாக ஒரு குரல் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஜெ.தீபா அணியின் முக்கிய நிர்வாகியும், அவரது டிரைவருமாக கூறப்பட்ட ராஜாவின் குரல் அது! ‘இரட்டை இலைக்கு உரிமை கேட்டு நாங்கள் தாக்கல் செய்த அபிடவிட்களை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம்’ என அப்போது ராஜா கூறினாராம்.
உடனே பசும்பொன் பாண்டியன், ‘அபிடவிட்களை தாக்கல் செய்தது நான்தான்! என் அனுமதி இல்லாமல், யாரும் வாபஸ் பெற அனுமதிக்க கூடாது’ என குரல் கொடுத்தார். இதனால் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தீபா அணியினர் இடையே வார்த்தை மோதல் உருவானது. எனினும் தேர்தல் ஆணையர்கள், ஜெ.தீபா அணியினரின் அபிடவிட் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே மேற்படி பசும்பொன்பாண்டியனை தனது அணியில் இருந்து அதிரடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டார் தீபா. இது தொடர்பாக நேற்று அவர் அளித்த பேட்டி வருமாறு:
‘இரட்டை இலை தொடர்பான பிராமண பத்திரங்கள் வாபஸ் என்பது, தவறான தகவல். தேர்தல் ஆணையத்தில் இருந்து இரட்டை இலை சின்னம் விவாகரத்தில் ஜெ.தீபா அணிக்கு வருகின்ற 13-ம் தேதி அழைப்பு வந்து உள்ளது. ஜெ.தீபா பேரவையில் டி.டிவி தினகரன் அணியை சார்ந்த ஸ்லீப்பர் செல்கள் அதிக அளவில் ஊடுருவியுள்ளார்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவால் தான், சசிகலாவுக்கு பரோல் கிடைத்தது. எடப்பாடி, சசிகலாவுக்கு எதிராக செயல்படுவது என்பது கண் துடைப்பே. இது முழுவதும் மக்களை ஏமாற்றக்கூடிய செயல். வேதா இல்லம் மீட்பதற்கு தீபக்குடன் சேர்ந்து செயல்படுவதில் தயாரில்லை. தனியாக வழக்கை எதிர்கொள்வேன். தீபக் இன்னும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளார். மக்கள் விருப்பபட்டால் எடப்பாடி உடன் இணைந்து பணியாற்றுவேன்’. இவ்வாறு கூறினார்.
இந்த விவகாரம் குறித்து பசும்பொன் பாண்டியனிடம் கேட்டபோது, “ஜெ.தீபா, எடப்பாடி அணியினருடன் சமரசம் ஆகிவிட்டார். எடப்பாடிக்கு ஆதரவாக அபிடவிட்களை வாபஸ் பெறவே ஆட்களை அனுப்பி வைத்திருக்கிறார். நான் அதற்கு உடன்பட வில்லை. அம்மா வழியில் அரசியல் செய்வார் என எதிர்பார்த்தே ஜெ.தீபா அணியை வலுப்படுத்தினோம்.
ஆனால் அவரது நோக்கம் அரசியலே அல்ல. வேறு எதிர்பார்ப்புகளுடன் அவர் இபிஎஸ் அனியுடன் கைகோர்க்க தயாராகி விட்டார். அவரை நம்பி இணைந்த தொண்டர்கள் ஏமாற்றப்பட்டு நிற்கிறார்கள். மாநிலம் முழுவதும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து உரிய முடிவை எடுப்போம். இது குறித்து அக்டோபர் 9-ம் தேதி செய்தியாளர்களை சந்திப்பேன்’ என்றார்.