போயஸ் கார்டன் அரசுடமை : தீபா எதிர்ப்பு, தீபக் ஆதரவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்க ஜெ.தீபா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது சகோதரர் தீபக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்க அவரது சகோதரர் மகன் தீபக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதேபோல், அவரது சொத்து மற்றும் உடமைகளும் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையும் நிலவி வருகிறது.

ஜெயலலிதா மறைந்த பிறகு, சாதாரண பொதுஜனங்கள் வரை பலரும் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை பார்த்து வந்தனர். அப்போதே, ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு எடுத்துக் கொண்டு, நினைவு இல்லமாக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர்

இந்த சூழலில் தனது தர்மயுத்தத்தை தொடங்கிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் இதே கோரிக்கையை விடுத்தார். காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் உள்பட வேறு சில தலைவர்களும் இதை வலியுறுத்தினர்.

ஆனால், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா மட்டும் இந்த சொத்துக்கு உரிமை கொண்டாடி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில் கூட,”போயஸ் கார்டன் இல்லம், எனக்கும் எனது சகோதரருக்கும் சேரவேண்டிய சொத்து. அது தொடர்பாக எங்கள் விருப்பமின்றி எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், நீதிமன்றத்தை நாடுவோம்”என தீபா அறிவித்தார்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். அத்துடன், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

இதையடுத்து, நேற்றிரவு சுமார் 8 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த தீபா,”போயஸ் கார்டன் இல்லம், எங்களின் பூர்வீக சொத்து. அதை விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. சட்ட ரீதியான நடவடிக்கைகளை நிச்சயம் நான் எடுப்பேன். அந்த இல்லத்தை பராமரிக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அந்த உரிமையை விட்டுக் கொடுக்கவே மாட்டேன். எடப்பாடி பழனிசாமி தனது பதவியை காப்பாற்ற இந்த அறிவிப்பை செய்திருக்கிறார்” என்றார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடமையாக்க அவரது அண்ணன் மகனும், தீபாவின் சகோதரருமான தீபக் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், நானும், எனது சகோதரி தீபாவும் தான் ஜெயலலிதாவுக்கு வாரிசுகள். எனது அத்தை ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எனக்கு விருப்பமே. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அரசு இதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

×Close
×Close