சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் எச்சரிக்கையை தொடர்ந்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், ஜாக்டோ ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. எனினும், தங்களது போராட்டத்தை கைவிடாமல் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் வருகிற 15-ம் தேதி (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி இன்று நடைபெற்ற விசாரணையின் போது, நீதிமன்றத்தை கேலிக் கூத்தாக்க வேண்டாம் என நேரில் ஆஜராகிய ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளிடம் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், வேலை நிறுத்தத்தை உடனே கைவிட வேண்டும் எனவும், போராட்டத்தை கைவிடுவது குறித்து முடிவெடுத்து நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். ஆனால், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் தயக்கம் காட்டினர். இதனால், கடுப்பான நீதிபதிகள், ஒரு மணி நேரத்தில் பணியில் இருந்து நீக்க முடியும் என எச்சரிக்கை விடுத்தனர்.
வேலைநிறுத்தத்தை ஜாக்டோ-ஜியோ உடனே கைவிட வேண்டும்;1 மணி நேரத்தில் பணி இழக்க நேரிடும்: நீதிமன்றம் எச்சரிக்கை
நீதிமன்றத்தின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்தனர். இந்த தகவலை நேரில் ஆஜரான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையேற்ற நீதிமன்றம், பிற்பகல் 2 மணிக்குள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், வருகிற 21-ம் தேதி பேச்சுவார்த்தைக்காக ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் தலைமைச் செயலர் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.