"ஐடி ரெய்டை அரசியல் பழிவாங்கும் நோக்கமாக நான் பார்க்கவில்லை" - விவேக் ஜெயராமன்!

ஜெயா டிவி, ஜாஸ் சினிமா வருவாய் குறித்து கணக்கு கேட்டனர். அனைத்து ஆவணங்களையும் கொடுத்தேன். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளேன்

கடந்த ஐந்து நாட்களாக ஜெயா தொலைக்காட்சியின் சிஇஓ விவேக் ஜெயராமன் வீட்டில் நடந்த ரெய்டில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றதாக கூறப்பட்டது. 20 க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதும், அதற்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கோடிக்கணக்கில் பரிமாற்றம் செய்ததும் அந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகின.

செய்தியாளர்களிடம் இன்று பேட்டியளித்த ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன்

இதையடுத்து விவேக்கின் 100க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். மேலும் போலி நிறுவனங்கள் தொடர்பாக ஆவணங்ககும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் மதிப்பு 1200 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “முதலில் ஐந்து நாள் வருமானவரித் துறை சோதனையின் போது மழையில் காத்திருந்த என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், ஊழியர்கள், ஊடக நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 5 நாட்களாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினார்கள். அவர்கள் கேட்ட ஆவணங்களை அளித்தேன்.

நான் கடந்த இரண்டு வருடமாக ஜாஸ் சினிமாவை கவனித்து வருகிறேன். ஜெயா டிவி நிர்வாகத்தை மார்ச்சிலிருந்து பார்த்து வருகிறேன்.

கடந்த ஐந்து நாட்களாக இது சம்பந்தமான டாக்குமெண்ட்ஸ் குறித்து விபரமாக கேட்டார்கள், அனைத்துக்கும் விபரமாக பதிலளித்துள்ளேன். இதை தவிர்த்து என் மனைவிக்கு கல்யாண நேரத்தில் போட்ட நகைகள் பற்றி கேட்டார்கள். அனைத்துக்கும் அக்கவுண்ட்ஸ் வைத்துள்ளேன், விரைவில் அவர்களுக்கு அதை சமர்பிப்பேன்.

வருமானவரித் துறையினர் அவர்கள் கடமையை செய்தார்கள். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். என்ன செய்தார்கள் என்பதை சொல்கிறேன், நான் இங்கு பேட்டி அளிக்க வரவில்லை, அதனால் கேள்வி பதிலாக சொல்ல விரும்பவில்லை. இதை தவிர்த்து சில வாரங்களில் அவர்கள் என்ன கேட்பார்களோ அதை நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன்.

அவர்கள் கடமையை அவர்கள் செய்தனர், குடிமகன் என்ற முறையில் என் ஒத்துழைப்பை அளித்தேன், பழி வாங்கும் நடவடிக்கையாக இதை கருதவில்லை. யார் தப்பா பணம் சம்பாதித்தாலும் அவர்கள் வருமான வரித்துறைக்கு வரி செலுத்தியே ஆக வேண்டும்.

ஆகவே யார் தவறு செய்தாலும் அது நானாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், நீங்களாக இருந்தாலும் அவர்கள் கடமையை ஆற்றியே ஆகவேண்டும். கட்டுப்பட்டே ஆக வேண்டும். கேள்விகளுக்கு பதிலளிப்பது நமது கடமை” இவ்வாறு தெரிவித்த விவேக், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சட்டென திரும்பி சென்றார்.

இதற்கிடையே, ஜாஸ் சினிமாஸ் நிர்வாகிகள் மூன்று பேர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் ஜாஸ் சினிமாஸ் வருமானம், வருமான வரி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

×Close
×Close