சென்னை சேப்பாக்கத்தில், தமிழகத்தின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஃபேஸ்புக்கில் மைத்ரேயன் எம்.பி. வெளியிட்ட கருத்து குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எங்கள் அணிக்குள் எந்த பிளவும் இல்லை. கருத்து வேறுபாடும் இல்லை. ஒருமித்த கருத்தோடு அனைவரும் ஒற்றுமையோடு தான் உள்ளோம். உள்கட்சி விவகாரம் குறித்து, பொதுவெளியில் விவாதிப்பது நன்றாக இருக்காது" என்றார்.
நவம்பர் 24., ஆம் தேதி தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படும் என நமது எம்.ஜி.ஆர் நாளிதழலில் குறிப்பிட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "நமது எம்.ஜி.ஆர். நாளிதழ், முரசொலி ஆகிவிட்டது. ஜெயா டிவி, கலைஞர் டிவியாகிவிட்டது. சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலையை இழுத்து மானபங்கம்படுத்திய திமுகவின் துரைமுருகனுடைய பேட்டியை எடுத்து ஜெயா டிவியில் போடுகிறார்கள் என்றால், இதை விட ஆதாரம் அதற்கு இருக்க முடியாது" என்றார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று வெளியிட்ட அறிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், "ஆளுநர் தனது நிலைப்பட்டை தெளிவாக கூறிவிட்டார். தமிழக அரசின் செயல்பாட்டை அவரே பாராட்டிவிட்டார். இதை பெரிதுபடுத்த தேவையே இல்லை" என்றார்.
மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "மீனவர் மீதான துப்பாக்கிச் சூட்டில், தமிழகத்தின் கருத்து குறித்து தெரிவிக்கப்பட்டுவிட்டது. நடுக்கடலில் நடந்த தாக்குதல் குறித்து வெளியாட்களுக்கு எதுவும் தெரியாது. இந்த தாக்குதல் குறித்து விசாரிக்க, டிஎஸ்பி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த விசாரணையின் முடிவில், உண்மை நிலவரம் தெரியவரும்" என்று தெரிவித்தார்.