Jayalalitha's Achivements: தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய அரசியல் வரலாற்றிலும் தனித்துவமான தடங்களை பதித்துச்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் இன்று. அவர் தனது ஆட்சிக் காலத்தில் பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி சாதித்துள்ளார்.
பெரும்பாண்மையாக ஆண்களே கோலோச்சுகிற தமிழக அரசியலில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக வெற்றிக்கொடி நாட்டியவர் ஜெயலலிதா. மார்க்கரெட் தாட்சர், இந்திராகாந்தி, மாயாவதி வரிசையில், இரும்பு பெண்மணியாக ஜெயலலிதா தனித்துவமிக்க அரசியல் ஆளுமையாக விளங்கினார்.
தமிழக அரசியலில் ஜெயலலிதா 16 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். அவர் முதலமைச்சாராக இருந்த கால கட்டத்தில் பல மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதே போல, இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியான பல மக்கள் நலத் திட்டங்களை கொண்டுவந்தார்.
தொட்டில் குழந்தை திட்டம்
ஜெயலலிதா 1991 ஆம் ஆண்டு முதல்முறையாக முதலமைச்சரானார். அவர் 1992 ஆம் ஆண்டு கொண்டுவந்த மிகச்சிறந்த திட்டம் தொட்டில் குழந்தை திட்டம். தமிழகத்தில் பெண்குழந்தைகள் பிறந்தால் அவர்களை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்கிற வழக்கம் இருந்த காலத்தில், பெண் குழந்தைகள் கொலையை ஒழித்திடும் நோக்கத்தில், தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பெண் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லையா அரசே வளர்க்கும் என்று கூறி தொட்டில் குழந்தை திட்டத்தை சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரவலாக்கினார்.
ஜெயலலிதாவின் தொட்டில் குழைந்தை திட்டம் அவருடைய புகழை ஐ.நா. சபை வரை பரவச் செய்தது. தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்துக்காக ஐ.நா.சபை ஜெயலலிதாவைப் பாராட்டியது.
அனைத்து மகளிர் காவல் நிலையம் அறிமுகம்
அதே போல, ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த மற்றொரு முக்கிய திட்டம், பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டன. அதே போல, அவர் 2003-2006 ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பெண்கள் மட்டுமே உள்ள சிறப்பு பெண்கள் ஆயுதப்படையும் தொடங்கப்பட்டது என்பது முக்கியமானது.
மழைநீர் சேகரிப்புத் திட்டம்
இந்த ஆண்டு சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடியபோது, கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா இரண்டாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றபோது, கொண்டு வந்த மழை நீர் சேகரிப்புத் திட்டம் நினைவு கூரப்பட்டது. நிலத்தடி நீர் மட்டத்தை மழை நீர் சேகரிக்க வேண்டும் என்ற அவருடைய தொலைநோக்கு பார்வை தமிழகத்துக்கு இப்போதும் தேவையாக உள்ளது.
கள்ளச் சாராயம் ஒழிப்பு
தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஏழை எளிய மக்களின் வாழ்வை அழித்துக்கொண்டிருந்தபோது, ஜெயலலிதா முதல்வராக இருந்த கால கட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் கடுமையாக இருந்தது. கள்ளச்சாராய ஒழிப்பில் சமரசமில்லாமல் ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், தனியார் மதுபானக் கடைகள் விற்பனையும் போலி மதுபானங்களும் அதிகரித்தபோது, தனியார் மதுக்கடைகளை தடை செய்துவிட்டு அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்துவைத்தார். பின்னர், அதனால், மக்கள் பாதிக்கப்பட்டு போராட்டங்கள் எழுந்தபோது, 2016 தேர்தலில் தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் என்று கூறினார். இப்படி மக்களை பாதிக்கிற எந்த விஷயமாக இருந்தாலும், ஜெயலலிதா அதன் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கியதில்லை.
லாட்டரி சீட்டு தடை
தமிழகத்தில் ஆண்கள் பெண்கள் என பலரும் அதிர்ஷ்டத்தை நம்பி கையில் உள்ள பணத்திற்கு லாட்டரி சீட்டுகளை வாங்கி வீணாய்ப் போய்க்கொண்டிருந்த போது, அதன் ஆபத்தை உணர்ந்து, 2003 ஆம் ஆண்டு லாட்டரி சீட்டை முற்றிலும் தடை செய்தார்.
பல ஆயிரம் கோடிகள் பணம் புழங்கும் லாட்டரியை தடை செய்வதால் சில ஆயிரம் பேர்கள் வேலை இழப்பார்கள். இதனால், தமிழகத்தின் வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி நூற்றுக்கணக்கில் லாட்டரி விற்பனை செய்யும் ஊழியர்களைத் திரட்டி அப்போது சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆனாலும், ஜெயலலிதா தனது முடிவில் பின்வாங்காமல் ஏழை எளிய மக்களை பாதிக்கிற லாட்டரி சீட்டை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருந்தார்.
கேரளா, சிக்கிம், மணிப்பூர் லாட்டரி என்று லாட்டரி அதிர்ஷ்டம் என்ற மூடநம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு ஏழை எளிய மக்களை சுரண்டுகிற லாட்டரி தொழில் இன்று தமிழகத்தில் இல்லையென்றால் அதற்கு ஜெயலலிதாவே காரணம்.
நில அபகரிப்புச் சட்டம்
உலகமயமாக்கலின் இரண்டாம் வருகையின்போது, இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது என்றால் அது மிகையல்ல. அரசியல் கட்சிகளின் துணையோடு, பலர் ரியல் எஸ்டேட் போர்வையில் நில அபகரிப்பு, அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டபோது, 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா கொண்டுவந்த நில அபகரிப்பு தடைச் சட்டம் சிறிது நிலம் வைத்திருந்த சாமானிய மக்களுக்கு பாதுகாப்பாக அமைந்தது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிகணினி திட்டம்
கணினி என்பது ஏழை, எளிய மாணவர்களுக்கு கணினி எட்டாக் கனியாக இருந்த காலத்தில், 2011 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் 11, 12 ஆம் வகுப்பு படிக்கிற மாணவர்களுக்கு இலவச மடி கணினி வழங்கி கணினியை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்தார்.
தமிழக அரசியலில் அரசியலில் அதிகாரம் மிக்க இரும்புப் பெண்மணியாக இருந்த ஜெயலலிதா, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், திருமண நிதியுதவித் திட்டம் என ஜெயலலிதா பல மக்கள் நலத் திட்டங்கள் மூலம் மக்களின் நன்மதிப்பைப் பெற்று ஒட்டு மொத்த தமிழகமே அம்மா என்று அழைக்கும் ஸ்தானத்தை அடைந்து தமிழக அரசியலில் யாராலும் அழிக்க முடியாத அளவுக்கு தடம் பதித்துச் சென்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.