மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோயம்புத்தூரில் முதன்முதலாக சிலை நிறுவப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. இன்று, கோயம்புத்தூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்காக கோயம்புத்தூரில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அதன் ஒருபகுதியாக, வ.உ.சி. மைதானம் அருகே உள்ள அண்ணா சிலையும் பராமரிக்கப்பட்டது.
அண்ணா சிலையைச் சுற்றி நான்கு புறமும் தகரத்தால் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று தகரங்கள் அகற்றப்பட்டபோது, அண்ணா சிலையுடன் கூடுதலாக எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலையும் அமைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட முதல் சிலை இது என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “அண்ணா சிலை இருக்கும் இடம், கட்சிக்காக ஏற்கெனவே மாநகராட்சி ஒதுக்கிய இடம். அதில் கூடுதலாக எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினர் அமைத்துள்ளனர். சிலைகளை நிறுவியதில் எந்த முறைகேடும் இல்லை” என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைந்து வருகிற டிசம்பர் 5ஆம் தேதியுடன் ஒரு ஆண்டு முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.