அன்பரசன் ஞானமணி
சசிகலாவைப் போல் ஜெயலலிதாவோடு போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்து, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் உரியவராக விளங்கியவர் இளவரசி. சசிகலாவுடன் தற்போது பெங்களூரு சிறையில் உள்ளார். இவரது மகள் கிருஷ்ணப்ரியா. தான் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மூலம், எளிய மக்களையும் சந்தித்து சமூக பணியாற்றி வரும் கிருஷ்ணபிரியா, அன்றாட அரசியல் நிகழ்வுகளையும் நுனிவிரலில் வைத்திருப்பவர். ஆனால், வழக்கமான அரசியல் பார்வையைத் தவிர்த்து, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர். எதிர்க்கட்சியாக இருந்தாலும், எதிரிக் கட்சியாக இருந்தாலும் தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக முன் வைக்கும் கிருஷ்ணபிரியாவிடம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சில கேள்விகளை முன்வைத்தோம். தன்னுடைய நினைவலைகளை மகிழ்ச்சியுடனும், பல இடங்களில் உருக்கமுடனும் நம்முடன் மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.
ஜெயலலிதா அவர்களை உண்மையாக நேசிக்கும் தொண்டர்கள் அவர்களது தலைவியைப் பற்றி அறியாத சில தகவல்களை இந்த செய்தியின் வாயிலாக தெரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.
ஜெயலலிதாவுக்கு பிடித்த உணவு எது?
ஜெயலலிதா அவர்கள் ஒரு 'உணவுப் பிரியர்' என்றே சொல்லலாம். உணவை ரொம்ப ரசிச்சு, ருசிச்சு சாப்பிடுவாங்க. குறிப்பா சொல்லணும்-னா எங்க அம்மாவோட(இளவரசி) சமையல் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். எங்க அம்மாவ, என்னோட அத்தை சசிகலா அவர்கள் 'அண்ணி'-னு கூப்பிடுவாங்க... அதனால போயஸ் கார்டன்-ல 'அண்ணியம்மா' அப்படின்னு தான் எங்க அம்மாவை எல்லோரும் அழைப்பாங்க. ஜெயலலிதா அவர்கள் 'அண்ணியம்மா' பக்குவத்துல சமைச்சு கொடுக்க முடியுமா'னு தான் கேட்டு அனுப்புவாங்க. உடனே எங்க அம்மாவும், 'அதனால என்ன'-னு சொல்லி உடனே அதை ரெடி பண்ணி கொடுப்பாங்க. குறிப்பா சொல்லணும்-னா எங்க அம்மாவோட அதிரசம் ரொம்பப் பிடிக்கும். போலி-னு ஒரு ஸ்வீட் செய்வாங்க. அது ரொம்ப பிடிக்கும். அப்புறம், எங்க அம்மா செய்யுற பீட்ரூட் அல்வா, கேரட் அல்வா, இதெல்லாம் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அப்புறம், என்னை பொறுத்தவரைக்கும் நான் நிறைய 'bake' பண்ணுவேன். அதுல 'chocolate muffin' கேக் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அதை சாப்ட்டு திரும்ப கேட்டு அனுப்புவாங்க. அவங்க விருப்பப்பட்டு கேட்பதனால, மீண்டும் செஞ்சு ஒரு டின்ல போட்டு கொடுத்து அனுப்புவேன். muffin wrapper -அ அழகா ரிமூவ் பண்ணிட்டு சின்ன பசங்க சாப்பிடுற மாதிரி, அவங்க சாப்பிடுறத பார்க்கவே அழகா இருக்கும்.
அடுத்து ரங்கன்-ன்னு ஒரு சமையல்காரர், நவராத்திரி டைமுல மட்டும் வந்து, சாமிக்கு நெய் வேத்தியம் வைப்பதற்காக, வீட்டுக்கே வந்து ஸ்வீட் செய்து கொடுப்பார். அவரு செய்யுறதுல பூசணி அல்வா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
'ரங்கன் பூசணி அல்வா-னா' அதுக்குன்னே காத்திருந்து உட்கார்ந்து சாப்பிடுவாங்க. அதேபோல், 'honey dew'-னு ஒரு ஸ்வீட் விரும்பி சாப்பிடுவாங்க. ஆந்திரா சாம்பார் ரொம்ப பிடிக்கும். அக்கார வடிசல் ரொம்ப பிடிக்கும். கோஸ் பட்டாணி பொறியல் அப்படின்னா, அதையும் உருளைக்கிழங்கு வறுவலையும் வச்சிக்கிட்டு, சாப்பாட்டுல அதை போட்டு, நெய்யிட்டு ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
இதெல்லாம், அவங்க ரொம்ப அடிக்கடி கேட்டு சாப்பிடுற பதார்த்தங்கள்.
அப்புறம், எல்லாத்தை விட அவங்களுக்கு பிடித்த ஆல்டைம் பேவரைட் டிஷ் எதுன்னா, ஐஸ்கிரீமை தான் சொல்லணும். வெண்ணிலா ஐஸ்கிரீம் வித் fruits அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இதுக்கு தான் நம்பர்.1 இடம்.
ஜெயலலிதாவுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியாக இருந்தாலும்)
அரசியலுக்கு வந்தப்றம், அம்மா அவர்கள் பார்த்த படங்கள் மிகவும் சொற்பம். அதை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி பார்த்த படங்களையே அவர் ரஜினிகாந்த் படங்களை தான் அதிகம் பார்த்திருக்கிறார். நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து ரஜினி படங்களையே அதிகம் பார்த்திருக்கிறோம். குறிப்பா சொல்லணும்-னா ஜெயலலிதா அவர்களுக்கு 'படையப்பா' ரொம்ப பிடித்த படம்.
கருணாநிதி வசனம் எழுதிய திரைப்படங்களில் ஜெயலலிதா விரும்பிப் பார்த்த அல்லது பாராட்டிய திரைப்படம் எது?
நான் முன்னரே சொன்னது போன்று, அரசியலுக்கு வந்த பிறகு, அம்மா பார்த்த சினிமாக்கள் மிகவும் குறைவு. அதைப்பற்றிய எண்ணமே அவருக்கு இருக்காது. சினிமா பற்றி பேசவும் மாட்டாங்க. 'எனக்கு மூவீஸ் பார்க்குற இண்டரெஸ்ட்டே போயிடுச்சு'-னு சொல்வாங்க. நான் 91ம் ஆண்டு முதல் அம்மாவை நெருக்கமாக பார்த்து வந்திருக்கிறேன். எனக்கு தெரிஞ்சு, டயலாக்ஸ் யாரு சிறப்பா எழுதியிருக்கா அப்டீன்னு அவங்க யாரையுமே குறிப்பிட்டு பாராட்டினது இல்ல. அவங்க படங்களை பற்றி பேசி இருக்காங்க. சில நினைவுகள் நியாபத்துக்கு வரும் போது பகிர்ந்துப்பாங்களே தவிர, மற்ற எந்த படங்களை பற்றியும் அவர் பெரிதாக டிஸ்கஸ் செய்தது இல்லை.
ஜெயலலிதா அவர்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
அம்மாவுக்கு பிடித்த அரசியல் தலைவர் மட்டுமல்ல, அவர் பலமுறை நினைவுகூர்ந்து பாராட்டிய அரசியல்வாதியும் திரு.எம்.ஜி.ஆர் அவர்களே.
தான் நடித்த படங்களிலேயே ஜெயலலிதாவுக்கு அதிகம் பிடித்த திரைப்படம் எது?
ஆயிரத்தில் ஒருவன், துணிவே துணை. குடியிருந்த கோவில்.
'குடியிருந்த கோவில்' படத்தை பற்றி பேசினாலே, அவர் முகம் ரொம்ப பிரகாசமாகிடும். அந்த படத்தில் அவர் அணிந்த ஆடைகள் பலவற்றை அவரே வடிவமைத்தாராம். அதைப் பற்றி பேசும் பொது, சந்தோஷத்தை தாண்டி ஒரு பெருமை அவங்க முகத்துல எப்போதுமே வந்துடும். திரும்ப திரும்ப அந்த படம் குறித்த காட்சிகள் எப்போது வந்தாலும், இது 'நானே பண்ணது.. நானே பண்ணது'-னு சொல்வாங்க. சொல்லும் போது குழந்தை மாதிரி ஆகிடுவாங்க. என்னைக்கும், குடியிருந்த கோவில் படத்தை மறக்க முடியாது.
நீங்கள் (கிருஷ்ணப்ரியா) குழந்தை பருவத்தில் இருந்தே அம்மா அவர்களிடம் வளர்ந்தவர். அந்த அனுபவம் எப்படி இருந்தது? திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த அம்மா, உங்களை வளர்த்த அனுபவம் பற்றி நீங்கள் பகிர விரும்புவது என்ன?
91ம் வருடத்துக்கு முன்பே, அவரை தெரிந்திருந்தாலும், அவரை சந்தித்து இருந்தாலும் என்னுடைய தந்தையான ஜெயராமன் அவர்கள் இறந்ததற்கு அப்புறம், அம்மா அவர்கள் மன்னார்குடிக்கே வந்து 'எல்லோரும் என் கூட வந்துருங்க'-னு கூப்பிட்டு, என் அம்மாவை எங்களையெல்லாம் அழைச்சிட்டு சென்னை வந்தாங்க.
ஸோ, 91ம் வருடத்தில் இருந்து அவர்களிடம் வளர்ந்தோம். எத்தனையோ வருட அனுபவங்கள் இருக்கு. அதையெல்லாம் ஒரு வார்த்தையில் விவரிச்சிட முடியாது.
குறிப்பா, சில நினைவுகள், 'என்னுடைய முடி அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு ரொம்ப curly hair இருக்கும். ஸோ, அதை தொட்டுப் பார்க்க அவங்க ஆசைப்படுவாங்க. அவங்களோட டிரெஸ்சிங் டேபிள்-ல என்னை உட்கார வச்சு, அவங்க நின்னுக்கிட்டு எனக்கு ஹேர் ஸ்டைல் பண்ணிப் பார்த்த மெமரிஸ் என் மனசுல அழகா படிஞ்சிருக்கு.
அப்புறம் என்னுடைய தம்பிக்கு (விவேக் ஜெயராமன்) அவர்கள் டான்ஸ் சொல்லிக் கொடுப்பாங்க (சிரிக்கிறார்....) என் தம்பி குழந்தையா இருக்கும் போதே டான்ஸில் அவனுக்கு ரொம்ப ஆர்வமுண்டு. 'காதலன்' படத்துல உள்ள பல பாடல்களுக்கு டான்ஸ் எப்படி ஆடணும்-னு தம்பிக்கு சொல்லிக் கொடுப்பாங்க. முகத்துல பவுடர் அடிச்சு விடுறது, பவுடரை அளவுக்கு அதிகமா கொட்டி விடுறது-னு அழகான நினைவுகள் இருக்கு.
எங்க கூட உட்கார்ந்து கேரம் விளையாடுவாங்க. நானும், என் அத்தை சசிகலாவும் ரொம்ப நல்லா கேரம் விளையாடுவோம். அதுனால எங்களை ஒரே டீமுல இருக்க அனுமதிக்க மாட்டாங்க. ஒவ்வொரு தடவையும் நான் அம்மாவோட டீமுக்கு போயிடுவேன். அதாவது பெரியத்தை டீமுக்கு போயிடுவேன். ஜெயலலிதா அம்மாவை நான் 'பெரியத்தை'-னு கூப்பிடுவேன். நானும், அம்மாவும் ஒரு டீமாகவும், என் அம்மா திருமதி.இளவரசி அவர்களும், அத்தை சசிகலா அவர்களும் எப்போதும் ஒரே டீமா இருப்பார்கள்.
அப்போ, என்னுடைய இஷ்டத்துக்கு நான் எந்த காயினையுமே தட்ட முடியாது. என் கைகள் கட்டப்பட்டிருக்கும். (சிரிக்கிறார்....)
'இதை அடி'-ன்னா நான் அதைத் தான் அடிக்கணும். அங்க ஃப்ரீடம் என்பது இருக்காது. அப்போ அந்த வயசுல எனக்கு அவ்ளோ கோபம் இருக்கும். இந்த காயின், இவ்ளோ வாட்டமா இருக்கு.. இதை அடிக்க விட மாட்றாங்களே'னு தோணும்.
'பிரியா இதை அடி.... பிரியா அதை அடி.....'-ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அந்த வயசுல அது கோபமா இருக்கும். பட், இப்போ நினைத்து பார்க்கும் போது, அந்த மெமரிஸ்-காக ஏங்குறோம். அதெல்லாம் மீண்டும் உண்மையா நடக்காதா-னு தோணுது.
கோடநாட்டுல இருக்கும் போது அவங்களை club கார்ல வச்சு ஓட்டுறது அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களை உட்கார வைத்து, நானும் எனது தம்பியும் club car-ல எஸ்டேட் சுத்தி ஓட்டிட்டு போவோம்.
அதேபோல், Boating போக விருப்பப்படுவாங்க. வாக்கிங் போக விரும்புவாங்க. அன்னைக்கு வாக்கிங் போகணும்-னு தோணுதோ என்னவோ, அவங்க 'வா வாக்கிங் போவோம்'-னு கூப்பிட்ட உடன் பிரெஷ் ஆகி பேசிக்கிட்டே நடப்போம். ஊஞ்சல்ல உட்கார்ந்து ஆடுவது ரொம்ப பிடிக்கும் அவங்களுக்கு.
குறிப்பாக, என்னோட வளைகாப்புல, நாங்க யாருமே எதிர்பார்க்காத தருணத்துல, திடீர்-னு 'என்ன தவம் செய்தனை' பாடலை பாட ஆரம்பிச்சுட்டாங்க. பாடுறேன்னு சொல்லக் கூட இல்ல. அவங்களா அறியாம அன்னைக்கு பாடுனாங்க. அது என் வாழ்க்கையின் மறக்க முடியாத சம்பவம்.
இந்த மாதிரி நிறைய இருக்கு. ஒண்ணா, ரெண்டா... நிறைய மெமரிஸ் மனசுல இருக்கு.
கொடநாட்டில் ஓய்வு எடுக்கும் ஜெயலலிதா, அங்கு எப்படி தன் பொழுதை கழிப்பார்? அங்கு எதில் அவர் அதிக ஆர்வம் செலுத்துவார்? அங்கு அவர் மிகவும் ரசித்த விஷயங்கள் என்னென்ன? அங்கு மரம், செடி வளர்ப்பதில் அவருக்கு அதிகம் நாட்டம் இருந்ததா?
கொடநாட்டுல அவங்க விரும்புவது அமைதியைத் தான். போயஸ் கார்டன்-ல வெளிலயே அவங்களால வர முடியாது. வீட்லயே ஆஃபிஸும் இருந்ததால யாராவது ஒருத்தர் வந்துட்டு போயிட்டு இருப்பாங்க. அதனால அவங்களால வெளில வர முடியாது. வீட்டுல இருக்கும் போது, நைட் கவுன்-ல இருப்பதனால அவங்களால வெளில அதோட வர முடியாது. அவங்களை ஒருத்தர் பார்க்குறாங்க அப்படின்னாலே, புடவைக் கட்டிய தோற்றத்தோடு தான் அவரை பார்க்க முடியும்.
ஆனா, கொடநாடு வந்தா அவங்க சல்வார் போட்டிருப்பாங்க. சல்வார் போட்டு அங்க மட்டும் தான் வெளில வருவாங்க. சாயந்திரம் ஆனாலே சல்வார் போட்டுட்டு, ஷூ போட்டுட்டு, தலைல மஃப்ளர்-லாம் கட்டிக்கிட்டு வாக்கிங் போக ரெடியா இருப்பாங்க. அவங்க கொடநாடு போனதே அங்க கிடைக்கும் freedomக்கும், பிரைவசிக்கும் தான்.
சென்னை-ல எப்போதும் Stressed-ஆ இருப்பாங்க. மத்த விஷயங்களை பேச கூட டைம் இல்லாம இருப்பாங்க. ஆனால், கொடநாடுல, மர ஊஞ்சல்ல உட்கார்ந்து ஆடிக்கிட்டே, பழைய பாடல்களை கேட்பது அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் அவருக்கு ஆர்வம் இருந்ததா?
நாய்கள் வளர்ப்பது அவருக்கு அலாதி பிரியம் உண்டு. 91ல நாங்க போயஸ் கார்டன் வந்த போது, 12, 13 நாய்கள் அங்க இருந்துச்சு. அப்போ அவங்க சிஎம் ஆகிட்டாங்க. அவங்களுக்கு டைம் இல்லாட்டியும், வாரத்துல ஒரு நாள் அந்த நாய்க்குட்டிகளுக்கு-ன்னே டைம் ஒதிக்கிடுவாங்க. சண்டே-ல காலை முதல் மாலை வரை ஒவ்வொரு நாய்க்குட்டியையும் அழைச்சிட்டு வரச் சொல்லி, ஒவ்வொரு நாய் கூடேயும் ஒரு மணி நேரத்தில் இருந்து, இரண்டு மணி நேரம் வரை செலவிடுவாங்க. நாய்க்குட்டிகள் வளர்ப்பதில் மட்டும் அவருக்கு அலாதி பிரியம் இருந்தது.
சசிகலா அவர்களை ஜெயலலிதா எப்படி நடத்தினார் என்பது பற்றிய உங்களது பார்வை என்ன? அதுகுறித்து நீங்கள் பகிர விரும்புவது?
அதை அவங்கே சொல்லிருக்காங்க. 'என்னை பெற்ற தாய் இருந்திருந்தால் கூட இப்படி பார்த்திருக்க மாட்டங்க'-னு சசிகலாவை பற்றி அம்மா சொல்லிருக்காங்க. அவங்க சொன்னதை தாண்டி நான் என்ன விவரிச்சிட முடியும்.
என்னுடைய அத்தைய 'உடன் பிறவா சகோதரி' அப்படின்னு ஜெயலலிதா அவர்கள் வெளில சொல்றாங்களே தவிர, என்னை பொருத்தவரைக்கும், கூட பொறந்த சகோதரியா இருந்திருந்தா கூட அப்படி நடத்தி இருப்போமா-ங்குறது சந்தேகம் தான். அந்த அளவுக்கு பிரியமோட, பாசத்தோட சசிகலாவை அத்தையை நடத்துனாங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.