ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணை விரைவில் தொடங்கும் என அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதியன்று இரவில் உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
அதேபோல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சுமார் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் என தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
முன்னதாக, மருத்துவமனையில் முகாமிட்டிருந்த அதிமுக செய்தித் தொடர்பாளர்கள், மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் என அனைவரும் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் எனவும், அவர் இட்லி சாப்பிடுகிறார் எனவும், அங்குள்ள செவிலியர்களிடம் சகஜமாக பேசுகிறார் எனவும், கூறி வந்த நிலையில், அவரது மறைவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா மறைந்து சுமார் 10 மாதங்கள் ஆகியும் அவரது மரணத்தில் உண்டான சர்ச்சை இன்னும் மறையவில்லை. நாள்தோறும் அது தொடர்பான பேச்சுகள் ஏதாவது ஒரு சூழலில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தர்மயுத்தத்தை தொடங்கிய பன்னீர்செல்வம் தன்னுடைய பிராதன கோரிக்கைகளில் ஒன்றாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என்றார். நீதி விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே அணிகள் இணைப்பு சாத்தியம் என அவரது தரப்பினர் கூறி வந்தனர். தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வர் தரப்பில் அளித்த உத்தரவாதத்தையடுத்து, இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. டிடிவி தரப்பு ஓரங்கட்டப்பட்டது.
இதன்பின்னர், ஜெயலலிதா மரணதிற்கு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என இபிஎஸ்-ஓபிஎஸ் கூறி வந்தனர். அந்த சூழலில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் இட்லி சாப்பிட்டார் என கூறியது பொய் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
இந்த விவகாரம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஒருவரே இப்படி பேசியதால், ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை மீண்டும் தலை தூக்கியுள்ளது. "அமைச்சர் யாரும் பார்க்க வில்லை என்று கூறுகிறார். ஆனால், மருத்துவமனையில் இருந்த போது, இடைத்தேர்தல், பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவிக்கு பரிந்துரை செய்தது உள்ளிட்டவைகளில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது எப்படி?" என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
"அமைச்சராக பதவியேற்பவர்கள் தங்களுக்குத் தெரியவரும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியேற்றுக் கொள்கிறார்கள். அதன்படி, ஜெயலலிதாவை கொலை செய்ய சதி நடப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தெரிந்திருந்தால் அதன் மீது அவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததன் மூலம் அமைச்சராக செய்ய வேண்டிய சில கடமைகளை சீனிவாசன் செய்யத் தவறியிருக்கிறார். இதற்கான தண்டனையையும் அவர் அனுபவித்தாக வேண்டும். அமைச்சர்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காலம் தாழ்த்தி விசாரணை கமிஷன் அமைப்பது சரியானது அல்ல என்ற விமர்சனங்களும் எழுந்து வருகிறது. அதேபோல், விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று சொல்கிறார்களே தவிர விசராணை எப்போது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முறைப்படி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை விரைவில் தொடங்கப்படும் என்றார்.
அதேபோல், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்ற அமைச்சர் கே.பாண்டியராஜனும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் "இட்லி" கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், தமிழக அமைச்சரவையில் நான் அங்கம் வகிக்கிறேன். எனவே அமைச்சராக இருந்துகொண்டு இன்னொரு அமைச்சரின் கருத்துக்கு, பொதுவெளியில் பதில் அளிப்பது முறை ஆகாது. வெகு விரைவில் ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணைக்கான அறிவிப்பு வரும். ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணைக்கு உறுதி அளித்த பின்னரே, எங்கள் தர்மயுத்தம் நிறைவடைந்து. அணிகளும் இணைந்தது என்றார்.