தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இறந்து வருகிற டிசம்பர் 5ஆம் தேதியுடன் ஒரு வருடம் ஆகிறது. தனி மனுஷியாக அரசியலில் நின்று போராடி ஜெயித்தவர் ஜெயலலிதா. தன்னை நம்பியவர்களுக்கு ஆதரவாக இருந்தார். அவரைப் பற்றி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான கதைகள் இருக்கின்றன.
செய்தி வாசிப்பாளரும், நடிகையுமானா ஃபாத்திமா பாபுவிடம் பேசினேன்...
“நேரு ஸ்டேடியம் திறப்பு விழாவை, நான், சுதா சேஷய்யன், நடிகை கஸ்தூரி, சந்தியா ராஜகோபால் உள்ளிட்ட ஏழெட்டு பேர் தொகுத்து வழங்கினோம். அரசு விழா என்பதால், திறப்பு விழாவுக்கு ஒருவாரம் முன்பிருந்தே நேரு ஸ்டேடியத்தில் ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது, நாலைந்து நாட்கள் தொடர்ச்சியாக நேரு ஸ்டேடியம் வந்து, விழாப் பணிகளை பார்வையிட்டுச் செல்வார் ஜெயலலிதா அம்மா.
அந்த சமயத்தில், ‘ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா?’ என அம்மாவிடம் கேட்டிருக்கிறார்கள். அவரும் ஓகே சொல்லி, குரூப் போட்டோ எடுத்திருக்கிறார்கள். ஆனால், அன்றைய தினம் நான் இல்லை. மறுநாள் விழாப் பணிகளை பார்வையிட வந்தவரிடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். எனக்காக மறுநாளும் போட்டோ எடுத்துக்கொள்ள அவர் சம்மதித்தார்.
அதேபோல், விழா நடந்த அன்று அனைவரும் அழகாக டிரெஸ் பண்ணிக்கொண்டு போயிருந்தோம். அப்போதும் போட்டோ எடுத்துக்கொள்ள கேட்டபோது, சிரித்த முகத்துடன் ஒப்புக் கொண்டார். அவருடைய பியானோ டீச்சர், சர்ச் பார்க்கில் அவர் படித்தபோது பியானோ சொல்லிக்கொடுத்த இம்மானுவேலும் அந்த விழாவில் ஒரு தொகுப்பாளராக இருந்தார். அவருடைய ஆங்கில உச்சரிப்பு நன்றாக இருக்கும் என்பதை நினைவில் வைத்திருந்து, அவரையும் அந்த விழாவின் தொகுப்பாளராக்கிய பெருமை அம்மாவையே சேரும்.
அந்தப் புகைப்படம் எடுக்கும்போது, நான் அம்மாவின் கையை ஒட்டி நிற்க வேண்டும். இம்மானுவேலுக்கு அம்மா அருகில் இடம் கிடைக்காததால், எனக்கும் அம்மாவுக்கும் நடுவில் தெரியுமாறு பின்னால் நின்று கொண்டிருந்தார். ‘அவருக்கும் கொஞ்சம் இடம் கொடுங்க’னு என்கிட்ட அம்மா சொன்னாங்க. அப்படி யாரையும் விட்டுக் கொடுக்காமல் இருப்பதில் அம்மாவுக்கு நிகர் அம்மாதான். இன்னும் அந்த போட்டோ என்னிடம் பத்திரமாக இருக்கிறது.
‘விழாவைத் தொகுத்து வழங்குவதற்கு எவ்வளவு சம்பளம் வேண்டும்?’ என்று கேட்டார் ஜெயலலிதா அம்மா. நாங்கள் என்ன சம்பளம் சொன்னோமோ, அதைவிட இரண்டு மடங்கு கொடுத்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்” என்று நினைவுகளில் இருந்து மீண்டார் ஃபாத்திமா பாபு.
தொடர்ந்தவர், “இதுவரை கிட்டத்தட்ட 10 முறைக்கு மேல் அம்மாவை சந்தித்துள்ளேன். ஒவ்வொரு நிகழ்வுமே மறக்க முடியாத நிகழ்வாக, பசுமரத்தாணி போல் என் நெஞ்சில் பதிந்திருக்கிறது. என் நினைவுகளை விட்டு நீங்காமல் அவை எப்போதுமே நிலைத்திருக்கும். அம்மாவின் இழப்பு, என்னைப் போன்றவர்களுக்கு பேரிழப்பு” என மறுபடியும் நினைவுகளுக்குள் மூழ்கிப் போனார்.