தமிழகத்தில் உடனடியாக ஆட்சியை கலைத்து விட்டு ஜெயலலிதா மரணத்தில் இருந்து தற்போது நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் வரை சி.பி.ஐ. விசாரணை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபாே கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- ஜெயலலிதா மர்ம மரணத்துக்கே இன்னும் விடிவு ஏற்படாத நிலையில், தொடர்ந்து பல்வேறு மர்ம மரணங்கள் ஏற்பட்டு மக்களை பெரும் குழப்பத் துக்கு ஆளாக்கி வருகிறது.
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை, மற்றொரு காவலாளி படுகாயம், ஜெயலலிதா அறையிலேயே புகுந்து கொள்ளை, டிரைவர் கனகராஜ் விபத்தில் பலி என இதுபோன்ற செய்திகள் பொதுமக்கள் நம்பும் வகையில் இல்லை. இரும்பு கோட்டை போன்று உள்ள கொடநாடு எஸ்டேட்டில் இது போன்ற சம்பவங்கள் தற்செயலாக நடந்ததாக கருத முடியாது.
ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் சசிகலா பினாமி முதல்வர்கள் பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போன்றவர்களால் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிக்கிறது. தற்போது தமிழகத்தில் ஆட்சி ஒன்று நடக்கிறதா? என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் மர்ம மரண சம்பவங்களுக்கு பின்னால் சதி இருப்பதாக அனைவருக்கும் சந்தேகம் உள்ளது.
எனவே, தமிழகத்தில் உடனடியாக ஆட்சியை கலைத்து விட்டு ஜெயலலிதா மரணத்தில் இருந்து தற்போது நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் வரை சி.பி.ஐ. விசாரணை அமைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன். தற்போது அமைச்சரவையில் உள்ளவர்களையும், கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும். அப்போது தான் முழு உண்மை தெரியவரும்.
தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தார்மீக பொறுப்பேற்று உடனே அமைச்சரவையை கலைக்க பரிந்துரை செய்து விட்டு, தானும் பதவி விலக வேண்டும் என்பதே உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.