ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வரவேற்றுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். பல்வேறு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மரணமடைந்தார்.
இதனையடுத்து முதலமைச்சராக பதவியேற்ற ஓ பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பது என்று தெரிவிக்கவில்லை. ஆனால், ஆட்சியும், கட்சியும் ஒரே தலைமையில் இருக்க வேண்டும் என சசிகலா முதலமைச்சராக வேண்டும் என அதிமுக-வில் கருத்துகள் எழுந்தன.
இதனால், ஓ பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர், ஜெயலலிதா சமாதியில் தியானம் மேற்கொண்ட அவர், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி தனியாக பிரிந்து சென்றார். அவர் பக்கம் ஓர் அணி உருவாகவே, அதிமுக இரண்டாக பிளவுட்டது.
இதையடுத்து, சசிகலா சிறைசெல்லவே, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், சசிகலா குடும்பதை வெளியேற்ற வேண்டும், ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்து, அவ்வாறு செய்தால் மட்டுமே அணிகள் இணைப்பு சாத்தியம் என கூறியது.
இதனிடையே, டிடிவி தினகரன் வருகையால், அதிமுக மூன்றாக பிளவுபட்டது. சமீபத்தில், மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு நீதி விசாரணை நடத்த வேண்டும், அப்போது தான் உண்மை நிலை வெளிப்படும் என்று டிடிவி தினகரனே கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை செய்யப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வரவேற்றுள்ளது. மிகச் சிறப்பான சிகிச்சை அளித்தும் ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாதது எங்களுக்கு மிக வருத்தம் அளிக்கிறது. அப்பல்லோவில் அளிக்கப்பட்ட உயர்தர சிகிச்சை விசாரணை மூலம் தெரியவரும் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் ஜெயலலிதா மரணத்தில் சி.பி.ஐ விசாரணை அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தமிழக தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் நீதி விசாரணையை இதனை வரவேற்றுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.