ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னையில் அவரது நினைவிடம் நோக்கி அதிமுக.வினர் கருப்பு ஆடைகள் அணிந்து அமைதிப் பேரணி நடத்தினர்.
ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அதிமுக சார்பிலும், டிடிவி தினகரன் அணி சார்பிலும் சென்னையில் அமைதி ஊர்வலம் நடக்கிறது. இரு ஊர்வலங்களும் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே தொடங்கி, வாலஜா சாலை வழியாக சென்று மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தை அடைகின்றன.
முதலில் காலை 10 மணிக்கு அதிமுக.வுக்கும், 11 மணிக்கு டிடிவி தினகரன் அணிக்கும் நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலையில் இருந்தே அதிமுக நிர்வாகிகள் அண்ணா சிலையில் இருந்து டி-1 காவல் நிலையம் வரை திரண்டிருந்தனர். இங்கு நெருக்கடி அதிகமானதால் ஏராளமான தொண்டர்கள் மெரினாவிலும் கூடி நின்றனர். Live Updates இங்கே..
பிற்பகல் 1.00 : டிடிவி தினகரன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் அதே அண்ணா சிலையில் இருந்து மெரினா நோக்கி அமைதி ஊர்வலம் நடத்தினர். இவர்களும் இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு போட்டியாக பெரும் கூட்டமாக திரண்டு மாஸ் காட்டினர். டிடிவி தினகரன் கருப்புச் சட்டை அணிந்து திறந்த வாகனத்தில் ஊர்வலமாக வந்தார்.
காலை 11.00 : ஜெயலலிதாவின் கட்சியையும் ஆட்சியையும் பாதுகாப்போம் உள்ளிட்ட உறுதிமொழிகளை ஓபிஎஸ் வாசிக்க கட்சியினர் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
காலை 10.50 : முதல்வர், துணை முதல்வரை தொடர்ந்து சீனியர்கள் அனைவரும் வரிசையாக ஜெயலலிதா நினைவிடத்தில் தலை சாய்த்தும், தொட்டு வணங்கியும், விழுந்து கும்பிட்டும் அஞ்சலி செலுத்தினர்.
காலை 10.45 : முதல்வரும் துணை முதல்வரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சீனியர் அமைச்சர்கள் உள்பட பலரும் கண்ணீர் கசிய அஞ்சலி செலுத்தியதை பார்க்க முடிந்தது.
காலை 10.40 : மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வழக்கமான வேட்டி சட்டையில் வந்தார். அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சீனியர்களான பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்டோர் கருப்பு உடையில் வந்திருந்தனர். முதல்வரும் துணை முதல்வரும் வெள்ளை வேட்டி, கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.
காலை 10.30 : அமைதி ஊர்வலத்தில் முன்னால் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மதுசூதனன் உள்ளிட்டோர் மெரினா வந்து சேர்ந்தனர்.
காலை 10.10 : அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி க.பழனிசாமி வருகை தந்ததும், அமைதி ஊர்வலம் ஆரம்பமானது.
காலை 10.05 : அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார்.
காலை 10.00 : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்பட சீனியர் நிர்வாகிகள் பலரும் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர்.