அப்பல்லோவில் இருந்து முன்னாள் கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு ஜெயலலிதா கையெழுத்திட்டு எழுதியதாக கூறப்படும் கடித ஆவணம் புதிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் இறந்தார். அவரது மரணம் தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இதற்கிடையே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மறுநாள், ஜெயலலிதா கையெழுத்திட்டு அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்த ஆவணம் இப்போது வெளியாகியிருக்கிறது. அதாவது, ஜெயலலிதா பூரண நலம் பெற வாழ்த்து தெரிவித்து வித்யாசாகர் எழுதிய கடிதத்திற்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா அனுப்பிய பதில் கடிதம் அது!
ஆங்கிலத்தில் ‘டைப்’ செய்யப்பட்ட அந்தக் கடிதத்தில் ஜெயலலிதாவும் ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார். கவர்னர் கடிதம் கிடைத்த அன்றே (2016, செப்டம்பர் 23) இந்த பதில் கடிதத்தை ஜெயலலிதா எழுதியிருக்கிறார்.
இந்தக் கடிதம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டு சுய நினைவின்றி, அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா மறுநாளே இவ்வளவு தெளிவாக கையொப்பம் இட்டு கடிதம் அனுப்பினாரா? என்கிற கேள்வி எழுகிறது. இந்தக் கடிதம் எழுதியது குறித்து மருத்துவ பதிவேடுகளில் தகவல் இருக்கிறதா? அப்பல்லோவில் சேர்ந்த மறுநாள் அப்பல்லோ ஆவணங்களில் பதிவாகியிருக்கும் மருத்துவ அறிக்கைகள், அவரது உடல்நிலை குறித்து கூறுவது என்ன?
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, மருத்துவர்களின் ஒப்புதலுடன் இந்த கடிதத்தை அனுப்பினாரா? அவருக்கு இந்த ஒப்புதலைக் கொடுத்த மருத்துவர் யார்? இப்படி கையொப்பம் இட்டு கடிதம் அனுப்பும் அளவுக்கு தெளிவாக இருந்த ஜெயலலிதாவின் உடல்நிலை எந்தக் கட்டத்தில் மோசமானது? என வரிசையாக கேள்விகள் வருகின்றன.
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், இந்தக் கடிதம் குறித்தும் விரிவாக விசாரிக்கவேண்டிய நிலையில் இருக்கிறது. அப்பல்லோ மருத்துவர்கள் இந்த விசாரணையில் இந்தக் கடிதம் குறித்து பதில் சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தவிர, ஜெயலலிதாவின் பாதுகாவலராக மருத்துவமனையில் இருந்த சசிகலா, அப்போதைய உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் இது தொடர்பாக விசாரிக்கப்படலாம்.
அனைத்துக்கும் மேலாக இந்தக் கடிதத்தை பெற்றவரான வித்யாசாகர் ராவிடம் இருந்தும் இது தொடர்பான தகவல்கள் விசாரணை ஆணையத்திற்கு தேவைப்படலாம். ஆனால் அரசியல் சாசனப் பொறுப்பில் இருந்த ஆளுனரை அழைத்து விசாரிக்கும் மரபு இல்லை என்கிறார்கள். எனவே விசாரணை ஆணையம் இந்த விவகாரத்தை எப்படி கையாளப் போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்னும் எத்தனை சர்ச்சைகள் கிளம்புமோ தெரியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.