ஜெயலலிதா நினைவு மண்டபம்: இபிஎஸ், ஓபிஎஸ் அடிக்கல் நாட்டினார்கள்

ஜெயலலிதாவுக்கு அங்கு ரூ.15 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்படும் என ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது சட்டசபையில் அறிவித்தார்.

ஜெயலலிதா நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டு விழா, யாகத்துடன் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

ஜெயலலிதா, தமிழ்நாடு அரசியலில் சுமார் கால் நூற்றாண்டு காலம் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர்! கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அவர் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு அங்கு ரூ.15 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்படும் என ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது சட்டசபையில் அறிவித்தார். ஆனால் அந்தப் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினாவில் நினைவு மண்டபம் கட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்தார்.

ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்காக குழு அமைத்து சிறந்த வரைபடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதன்படி மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு இன்று (மே 7) அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி காலை 6 மணிக்கு யாகங்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. காலை 8.30 மணியளவில் ஜெயலலிதா நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்கள்.

ஜெயலலிதா நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலரும் கலந்து கொள்கிறார்கள்.

முன்னதாக நேற்று மாலை அடிக்கல் நாட்டு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார். அங்கு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். ஜெயலலிதா நினைவிடத்தில் விழுந்து உணர்ச்சிபூர்வமாக வணங்கினார் ஓபிஎஸ்!

ஜெயலலிதா நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டு விழா LIVE UPDATES

காலை 9.32 : முதல்வர் மற்றும் துணை முதல்வர் மலர் தூவி செங்கலை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினார்கள்.

காலை 9.20 : அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொடங்கியது. அடிக்கல் நாட்டுவதற்கு முன்பு நடைபெறும் பூமி பூஜை துவங்கியது. முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

காலை 6.00 : ஜெயலலிதா நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி யாக பூஜைகளுடன் தொடங்கியது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிந்து உட்கார்ந்தபடி அய்யர்கள் சொன்ன மந்திரங்களை கூறி பூஜையில் கலந்து கொண்டனர். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

×Close
×Close