Advertisment

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறப்பு : திமுக, காங்கிரஸ், லீக் புறக்கணிப்பு

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றிருப்பதால், அவரது படத்தை திறக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jeyalalitha Photo Opening at Assembly

Jeyalalitha Photo Opening at Assembly

ஜெயலலிதா படம், பலமான சர்ச்சைகளுக்கு இடையே இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Advertisment

ஜெயலலிதா படம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்கப்படுவது சர்ச்சை ஆனது. தலைமைச் செயலகத்தில் சட்டமன்றம் கூடும் அரங்கில், முக்கிய தலைவர்களின் புகைப்படங்கள் பொருத்தப் பட்டிருக்கின்றன. அந்தத் தலைவர்களின் படங்களின் வரிசையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தையும் திறக்க அதிமுக அரசு முடிவு செய்தது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றிருப்பதால், அவரது படத்தை திறக்கக் கூடாது என திமுக, காங்கிரஸ், தே.மு.தி.க., இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. பாஜக மட்டும் இந்தப் படத் திறப்பை எதிர்க்கவில்லை.

ஜெயலலிதா படம் திறப்பு தொடர்பான LIVE UPDATES

பகல் 12.20 : தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, ‘ஜெயலலிதா படம் திறப்பு நிகழ்ச்சிக்கு எனது ஆதரவு உண்டு. ஆனாலும் காங்கிரஸ் மாநில தலைவர் விடுத்த அறிக்கைக்கு மதிப்பு கொடுத்து இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை.’ என்றார். தொகுதி மக்களின் பிரச்னை தொடர்பாக முதல்வரை சந்தித்து மனு கொடுத்ததாகவும் கூறினார் விஜயதரணி.

காலை 11.15 : சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதை எதிர்த்து, திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. இதை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடப்பட்டது. இந்த வழக்கு நாளை (13-ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

காலை 11.10 : டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ‘ட்வீட்’டில், ‘சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டு விட்டது. இனி அங்கு புனிதம் இல்லை. குறைந்தபட்சம் அங்கு ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுள்ள காந்தி, பெரியார், அண்ணா உள்ளிட்ட 10 பேரின் படங்களை அகற்றி விடலாமே. அவர்களின் புனிதமாவது காக்கப்படும் அல்லவா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

காலை 10.50 : ஜெயலலிதா படத்தை வெளியே திறக்கலாமே தவிர பேரவையில் கூடாது என குறிப்பிட்டார், நிருபர்களிடம் பேசிய விஜயகாந்த். த.மா.கா. தலைவர் வாசன், ‘சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார்.

காலை 10.45 : எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் இருக்கைக்கு எதிரில் ஜெ. படம் அமைக்கப்பட்டுள்ளது.

காலை 10.35 : ‘1991 முதல் 6 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று மாண்புமிகு அம்மா அவர்களின் திரு உருவப் படத்திற்கு கீழே எழுதப்பட்டுள்ள, மாண்புமிகு அம்மா அவர்களின் தாரக மந்திரமான, “அமைதி, வளம், வளர்ச்சி” என்ற பாதையில், தமிழ்நாட்டை திறம்பட வழிநடத்தியவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.’ - இபிஎஸ்

காலை 10.32 : ‘மண்ணை விட்டு மறைந்து விண்ணுக்குச் சென்றாலும், நம்முடைய மனங்களில், தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் நிரந்தரமாக வீற்றிருக்கும் தங்க நிகர்த்தலைவி. பூமி உள்ளவரை, மாண்புமிகு அம்மா அவர்களின் புகழ் நிலைத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.’ - முதல்வர் இபிஎஸ்

Jeyalalitha photo Opening ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசிய காட்சி.

காலை 10.30 : அரசியலில் பீனிக்ஸ் பறவையாக எழுச்சி பெற்றவர் ஜெயலலிதா என படத் திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

காலை 10.15 : ‘புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், நிலைத்த புகழோடு, நீக்கமற நம்முள் நிறைந்திருக்கிறார். இவ்வளவு விரைவாக, மாண்புமிகு அம்மா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து செல்வார், தீராத வேதனையை தருவார், என்று, கனவில் கூட நாம் நினைத்துப் பார்த்ததில்லை.’ - ஓபிஎஸ்

காலை 10.15 : ஜெயலலிதா படம் திறந்ததும், கடந்த 2016-ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டின்போது ஜெயலலிதா ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு சட்டமன்றத்தில் போடப்பட்டது.

காலை 10.15 : ‘மாண்புமிகு அம்மா அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது, அம்மா அவர்கள் ஒருவரைத் தவிர, ஏனைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மாண்புமிகு அம்மா அவர்கள் தனி ஒருவராக பேரவைக்கு வந்து, சிங்கம்போல கர்ஜித்தார்.’ - ஓபிஎஸ்

காலை 10.14 :  ‘ ஈழத்தில் தமிழ் இனத்தை அழித்து, ஆணவத்தில் மிதந்த ராஜபக்ஷே, ஒரு போர்க் குற்றவாளி என்ற வரலாற்று தீர்மானத்தை, இதே சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய வீரமங்கை மாண்புமிகு அம்மா அவர்கள்.’ - ஓபிஎஸ்

காலை 10.13 : ‘ஒரு தாய்க்குத்தான் தெரியும், பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று... ​மாண்புமிகு அம்மா அவர்களுக்குத்தான் தெரியும், தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று, என்று மக்கள் மனம் மகிழ்ந்து, மன நிறைவு பெற வைத்தார்.’ - ஓபிஎஸ்

காலை 10.12 : ‘என்றும் பொய்க்காத வாய்மையாலும், எதிலும் தோற்காத நேர்மையாலும்,இந்த சட்டமன்றத்திற்கே பெருமை தேடித் தந்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள். அந்த பெருமைக்கு பெருமை சேர்க்கும் விதமாக,சட்டப்பேரவை மண்டபத்தில்,அம்மா அவர்களது திருவுருவப்படத்தை, அவரது தொண்டர்களாகிய நாம் இன்று திறந்து வைக்கிறோம்.’ - ஓபிஎஸ்

காலை 10.10 : ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் முன்னிலை வகித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்த சாதனையை 32 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கியவர் ஜெயலலிதா’ என குறிப்பிட்டார்.

காலை 10.00 : ‘ஜெயலலிதா படம் திறக்கப்பட்டாலும், நீதிமன்றம் மூலமாக அந்தப் படத்தை அகற்ற நடவடிக்கை எடுப்போம்’ என திமுக எம்.எல்.ஏ. சேப்பாக்கம் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறினார்.

காலை 9.45 :துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்புரையை முடித்ததும், ஜெயலலிதா உருவப் படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு பிடித்தமான, ‘தங்கத் தாரகையே வருக... வருக... வருக...’ என்கிற பாடல் ஒலிபரப்பானது. முதல்வர், துணை முதல்வர் உள்பட அனைவரும் எழுந்து நின்று உணர்வு பூர்வமாக கும்பிட்டபடி நின்றனர்.

Jeyalalitha Photo Opening at Assembly, LIVE UPDATES தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் பெண் தலைவரின் படமாக, ஜெயலலிதா படம் திறப்பு

காலை 9.40 : சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் அமரும் இடத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அமர்ந்திருக்கிறார். திமுக கொறடா சக்கரபாணி அமர்ந்திருக்கும் இடத்தில் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் அமர்ந்துள்ளார். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்று பேச, படத் திறப்பு நிகழ்ச்சி தொடங்கியது.

காலை 9.40 : ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வான டிடிவி தினகரன் டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சியில் இருப்பதால், ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியை வரவேற்று அவர் பேட்டி கொடுத்தார். டிடிவி ஆதரவு நிலையில் செயல்படும் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருதாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காலை 9.30 : ஜெயலலிதா உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி தொடங்கியது. திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களின் இருக்கைகளில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்தார்கள்.

காலை 9.20 : ஜெயலலிதா உருவப்படம் 7 அடி உயரத்தில் 5 அடி அகலத்தில் தயார் செய்யப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் உள்ள இதர தலைவர்களின் படங்களும் இதே அளவில்தான் இருக்கின்றன. சட்டமன்றத்தில் ஆளும்கட்சியினர் அமரும் பகுதியில் முதல்வர் அமர்ந்திருக்கும் பகுதிக்கு நேர் பின்னால் எம்.ஜி.ஆர். படம் அருகே ஜெயலலிதா படம் திறக்கப்படுகிறது.

காலை 9.15 :ஜெயலலிதா உருவப் படத்தை சட்டமன்றத்தில் திறக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் திறந்து வைக்கிறார்.

காலை 9.00 : ஜெயலலிதா உருவப் படங்களை அரசு அலுவலகங்களில் திறக்கக்கூடாது என திமுக எம்.எல்.ஏ. சேப்பாக்கம் அன்பழகன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதற்காகவே திமுக தரப்பு நீதிமன்றத்தில் முறையிட வாய்ப்பு கொடுக்காமல் வெள்ளிக்கிழமை மாலை அறிவிப்பை கொடுத்துவிட்டு, திங்கள் காலையில் படத்தை திறந்து வைப்பதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

காலை 8.55: தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏற்கனவே திருவள்ளுவர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், பெரியார், ராஜாஜி, காமராஜர், காயிதே மில்லத், அண்ணா, முத்துராமலிங்கத் தேவர், எம்.ஜி.ஆர் ஆகிய 10 பேரின் படங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 11-வது படமாக ஜெயலலிதா படம் வைக்கப்படுகிறது

காலை 8.50: கண் அறுவை சிகிச்சை காரணமாக கடந்து சில நாட்களாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்.

காலை 8.47 : ஜெயலலிதா உருவப் படத்தை பொருத்துவதற்கான முன் ஏற்பாடுகளை நேற்று (11-ம் தேதி) மாலையிலேயே சட்டமன்ற அலுவலர்கள் ஆரம்பித்துவிட்டனர். மொத்த தலைமைச் செயலகத்தையும் வண்ண விளக்குகளால் அலங்கரித்தனர். தலைமைச் செயலக வாசலில் வாழைமரத் தோரணங்கள் அமைத்தனர்.

காலை 8.45 : பிப்ரவரி 12-ம் தேதி (இன்று) காலை 9.30 மணிக்கு ஜெயலலிதா உருவப்படம் சட்டமன்றத்தில் திறக்கப்படும் என கடந்த 9-ம் தேதி மாலையில் சட்டமன்ற செயலாளர் பூபதி அறிவித்தார்.

 

Tamilnadu Assembly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment