ஜெயலலிதா படம் திறப்பு சட்டப்படி சரியானதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஜெயலலிதா உருவப் படத்தை பிப்ரவரி 12-ம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழக சட்டமன்ற அரங்கில் திறக்க இருப்பதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறக்கக்கூடாது என்பது எதிர்க்கட்சிகளின் கருத்து.
ஜெயலலிதா மறைந்துவிட்டதால் சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில், ஜெயலலிதாவை ‘ஏ1’ என குறிப்பிட்டு, ஏ1 முதல் ஏ4 வரையிலான 4 பேரும் குற்றச் சதியில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா சொத்துக் குவிக்கவே சசிகலா உள்ளிட்டோரை தன்னுடன் வைத்திருந்ததாகவும் கடுமையான வரிகள் இருக்கின்றன. அதே சமயம், தீர்ப்பின் கடைசி வரிகளில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை அறிவித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவை குற்றவாளி என நேரடியாக கூறவில்லை.
ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்பதே இதில் உள்ள புரிதல்! ஆனால் வழக்கில் விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை ஜெயலலிதாவின் சொத்துகளில் இருந்து எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த அம்சத்தின் அடிப்படையிலேயே ஜெயலலிதாவை குற்றவாளி என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறவில்லை என அதிமுக.வினர் வாதாடுகிறார்கள்.
இதைத் தாண்டி, சட்டமன்றத்தில் யார், யார் படத்தை திறக்கலாம் என்பதற்கு விதிமுறைகளோ, வழிகாட்டுதலோ இல்லை. எனவே சட்டரீதியாக ஜெயலலிதா படத்தை திறப்பதை தடுக்க முடியுமா? என்கிற கேள்வி எழுகிறது. ஆனாலும் திமுக தரப்பில் இந்தப் படம் திறப்பு விழா நடைபெறும் வேளையில் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருக்கிறார்கள். பாமக.வும் நீதிமன்றத்தை அணுகும் எனத் தெரிகிறது.
சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஜெயலலிதா படம் திறப்பு பெரும் சர்ச்சை ஆகிவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.