ஜெயலலிதா படம் திறப்பு : திமுக அணியில் சுருதி பேதம் ஏன்?

ஜெயலலிதா படத் திறப்புக்கு வைகோ, மவுனத்தையே பதிலாக கொடுத்தார். திருமா மென்மையாக கருத்து தெரிவித்தார். விஜயதரணி ஆதரவு கொடுத்தார்.

ஜெயலலிதா படத் திறப்புக்கு வைகோ, மவுனத்தையே பதிலாக கொடுத்தார். திருமா மென்மையாக கருத்து தெரிவித்தார். விஜயதரணி ஆதரவு கொடுத்தார்.

Jeyalalitha Portrait In TN Assembly, different opinion in DMK Alliance

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறக்கப்பட்ட ஜெயலலிதா படம்

ஜெயலலிதா உருவப் படம் இன்று (பிப்ரவரி 12) தமிழ்நாடு சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். ஜெயலலிதா படத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில், சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார்.

ஜெயலலிதா உருவப்படம் திறப்பை திமுக கடுமையாக எதிர்த்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தையும் அணுகியிருக்கிறது. அது தொடர்பான விசாரணை நாளை (13-ம் தேதி) நடைபெற இருக்கிறது. ‘குற்றவாளியின் படத்தை திறந்து வைத்ததன் மூலமாக சட்டமன்ற மாண்பை பாதுகாக்க வேண்டிய சபாநாயகரே அதனை அவமதித்துவிட்டார்’ என கடுமையாக கருத்து கூறியிருக்கிறார் ஸ்டாலின்.

ஜெயலலிதா படம் திறப்பு விவகாரத்தில் தேமுதிக, இடதுசாரிகள், பாமக ஆகியனவும் கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தன. காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி நேற்று (11-ம் தேதி) பகலில் படத் திறப்புக்கு ஆதரவு தெரிவித்ததுடன், ‘சென்னையில் இருந்தால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்’ என கூறினார்.

சட்டமன்ற விவகாரங்கள் அனைத்திலும் சமீபகாலமாக திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய 3 எதிர்க்கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை எடுத்து வந்தன. ஆனால் காங்கிரஸ் கொறடாவான விஜயதரணியே இதில் எதிர் நிலைப்பாடு எடுத்தது, திமுக.வுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அறிவாலயத்தின் இந்த அதிருப்தி, காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ஜெயலலிதா படம் திறப்பு குறித்து கடந்த வெள்ளிக் கிழமையே அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது. திமுக உடனடியாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ் மாநிலத் தலைவரான திருநாவுக்கரசர் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இதில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் திமுக.வின் அதிருப்தி தெரியவந்ததும், ஞாயிறு இரவு 7 மணிக்கு திருநாவுக்கரசர் பெயரில் ஒரு அறிக்கை வந்தது. அதில், ஜெயலலிதாவை ‘குற்றவாளி’ என குறிப்பிட்டு ஸ்டாலின் வார்த்தைகளை வழிமொழியும் தொனி இருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் திருநாவுக்கரசர் அந்த அறிக்கையில் அறிவித்தார். அதோடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி மூலமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு போன் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த போன் தகவலும் விஜயதரணிக்கு போய்ச் சேரவில்லை. இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறப்புவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே விஜயதரணி, தலைமைச் செயலகம் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் விஜயதரணி, ஜெ.படத் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

பின்னர் சட்டமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய விஜயதரணி, ‘உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தபோது ஜெயலலிதா உயிருடன் இல்லை. எனவே அவருக்கு ‘சீராய்வு மனு’ தாக்கல் செய்யும் வாய்ப்பு இல்லை. எனவே சட்டப்படி, ஜெயலலிதாவை குற்றவாளியாக இதில் கருத முடியாது. எனவே அவரது படத்தை திறப்பதில் தவறில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து!

இன்னும் சொல்வதானால், அவர் இறந்து ஒன்றேகால் ஆண்டுகள் ஆகிறது. எனவே இதற்கு முன்பே அவரது படத்தை திறந்திருக்க வேண்டும். ஒரு பெண்ணாக என்னைப் போல் எத்தனையோ பேர் அரசியலில் இயங்க ஜெயலலிதா முன் உதாரணமாக இருந்திருக்கிறார். பல மக்கள் நலத் திட்டங்களையும் செயல் படுத்தினார். எனவே அவரது படத்தை திறப்பதில் தப்பில்லை.

ஆனாலும் கட்சித் தலைவரின் அறிக்கைக்கு மதிப்பு கொடுத்து நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. ஜெயலலிதாவின் படத்தை திறந்த சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தேன். எனது தொகுதிக்கு உட்பட்ட அருமனையில் போலீஸ் தடியடி நடத்தியது குறித்தும், என் தொகுதி மக்களின் பிரச்னைகள் குறித்தும் முதல்வரிடம் மனு கொடுத்தேன்’ என்றார்.

ஜெயலலிதா குற்றவாளியா, இல்லையா? என்கிற விவகாரத்தில் திருநாவுக்கரசரின் கருத்துக்கு நேர் எதிராக விஜயதரணி கருத்து கூறியது குறிப்பிடத்தக்கது. பின்னர் இது குறித்து திருநாவுக்கரசரிடம் நிருபர்கள் கருத்து கேட்டபோது, ‘ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சியில் விஜயதரணி கலந்து கொள்ளாததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லை. ஜனநாயக நாட்டில் சொந்தக் கருத்தைக் கூற யாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனாலும் அவரது கருத்துகள் தலைமைக்கு எடுத்துச் செல்லப்படும்’ என்றார்.

இதேபோல மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று கவிஞர் குடியரசு நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சி பற்றி கேட்டபோது, ‘இன்று அண்ணன் குடியரசு நினைவுதின நிகழ்ச்சி. வேறு எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை’ என நழுவினார் வைகோ. திமுக.வுடன் கூட்டணி தொடரும் என ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்திருந்தபோதும், ஜெயலலிதா மீது விமர்சனம் வைக்கை வைகோ தயாரில்லை என்பதையே அவரது நழுவல் உணர்த்தியது.

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும், ‘ஜெயலலிதாவை விமர்சிக்க வேண்டும் என்கிற நோக்கம் எங்களுக்கு இல்லை. ஆனாலும் இது சட்டப்படி சரியா? என்பதை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யோசிக்க வேண்டும்’ என மென்மையான வேண்டுகோளை முன்வைத்தார்.

திருமாவையும், வைகோவையும் பொறுத்தவரை, ‘ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் இன்னும் ஆதரவும் அனுதாபமும் இருக்கிறது. இந்தத் தருணத்தில் அவரை விமர்சிக்க வேண்டிய தேவை இல்லை.’ என கருதுவதாக தெரிகிறது. அதனாலேயே இடதுசாரிகள் அளவுக்குகூட இந்த விஷயத்தில் அவர்களால் ‘ரீயாக்ட்’ செய்ய முடியவில்லை.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close