ஜெயலலிதா வீடியோ எப்படி வெற்றிவேலிடம் சென்றது? என டிடிவி தினகரனுக்கு கிருஷ்ணபிரியா கேள்வி விடுத்தார். இது நம்பிக்கை துரோகம் என்றும் விமர்சித்தார்.
ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்ற வீடியோவை இன்று (டிசம்பர் 20) டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவிருக்கும் சூழலில், இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டதற்கு இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையிலான ஒருங்கிணைந்த அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. திமுக உள்ளிட்ட இதர கட்சிகளும், ‘அரசியல் ஆதாயத்திற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக’ குற்றம் சாட்டுகின்றனர்.
பரபரப்பான இந்தச் சூழலில் டிடிவி.தினகரனின் உறவினரும் சசிகலாவின் அண்ணன் மகளுமான கிருஷ்ணபிரியா இந்த விவகாரத்தில் டிடிவி தரப்புக்கு எதிராக கொந்தளிக்க ஆரம்பித்திருப்பது ஹைலைட்! ‘டிடிவி.யுடன் இருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல் இது’ என தனது முகநூல் பக்கத்தில் கிருஷ்ணபிரியா விமர்சித்தார்.
தொடர்ந்து இன்று பிற்பகலில் சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு கிருஷ்ணபிரியா பேட்டியளித்தார். அப்போது கிருஷ்ணபிரியா கூறியதாவது:
வீடியோவை வெளியிட்டதற்காக முதலில் வெற்றிவேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். சசிகலா 33 வருடம் அம்மாவுடன் இருந்து, அதில் எவ்வளவு சுகம் எனத் தெரியாது. ஆனால் துக்கங்களில் கூடவே இருந்தார். அப்படி இருந்தவங்களுக்கு கொலை காரி, கைய எடுத்திருக்கா என எவ்வளவோ பட்டங்கள்! கொலைகாரி என்பதைவிட என்ன பெரிய பட்டம் இருக்க முடியும்?
அப்பவே அந்த வீடியோவை வெளியிடணும்னு சிலர் கேட்டாங்க. அதற்கு தன்னைப் பற்றி என்ன சொன்னாலும் பரவாயில்லை, அம்மாவை அந்தத் தோற்றத்தில் வெளியிட முடியாதுன்னு சொன்னவர் சசிகலா. இப்போது இடைத்தேர்தலுக்காக சசிகலாவே வெளியிட அனுமதித்ததாக சிலர் சமூக வலைதளங்களில் எழுதுகிறார்கள்.
தன்னை கொலைகாரின்னு சொன்னப்போ, வெளியிடாதவர் இடைத்தேர்தலுக்காக வெளியிடுவாரா? ஒரு பேட்டியில் நிருபர் ஒருவர் அந்த வீடியோவை வெளியிடாததால் உங்கள் மீது சந்தேகம் எழுப்புகிறார்களே? எனக் கேட்டார். அதற்கு, ‘அதனாலென்ன? கொலைகாரி என்றுதானே சொல்வார்கள். சொல்லட்டும்’ என்றார் சசிகலா.
இந்த வீடியோவை கொடுத்தது டிடிவி.யிடம் கொடுத்தது நாங்கதான். கொடுக்க சொன்னது சசிகலா. ஏன்னா விசாரணை கமிஷனுக்கு அது போகணும். பப்ளிக் டிஸ்பிளேவுக்கு போகாதுன்னு நம்பிக் கொடுத்தோம். இப்ப என் சந்தேகம், டிடிவிகிட்ட கொடுத்த வீடியோவ அவர் ஏன் வெற்றிவேலிடம் கொடுத்தார்? அத விசாரிக்கணும். அதைப் பற்றி கமெண்ட் கேட்டா, இப்போ பதில் இல்லை.
இந்த வீடியோவை வெளியிட்றதா இருந்தா, சின்னம்மாவே வெளியிட்டிருப்பாங்க. வெற்றிவேல் யாரு அதை வெளியிட? அம்மாவின் தொண்டன் என்கிறார். அம்மாவை மட்டுமல்ல, சசிகலாவையும் அவர் அவமானப்படுத்தியிருக்கிறார். நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் அவர்.’ என கொந்தளிப்புடன் கூறினார் கிருஷ்ணபிரியா.