போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் 4 மணி நேரம் மட்டுமே வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதன் அதிர்வுகள், தமிழக அரசியலை பலமாக தாக்கியிருக்கிறது.
ஜெயலலிதா மறைந்து ஓராண்டை நெருங்குகிறது. அவரையும், அவரது தோழி வி.கே.சசிகலாவையும் மையமாக வைத்து அரங்கேறும் பரபரப்புகள்தான் தமிழக அரசியலை இன்னும் சூடாக்கிக் கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நவம்பர் 17-ம் தேதி (நேற்று) இரவு வருமான வரித்துறை ரெய்டால் தமிழக அரசியல் வட்டாரமே அதிர்ந்தது. நேற்று இரவு 9 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் போயஸ் கார்டனை உலுக்கி எடுத்தனர்.
போயஸ் கார்டனில் இருந்து இரு லேப் டாப்களையும், இரு பென் டிரைவ்களையும், ஜெயலலிதாவுக்கு வந்தக் கடிதங்களையும் வருமான வரித்துறை எடுத்துச் சென்றிருக்கிறது. இதையொட்டி அரசியல் ரீதியாக இன்று (நவம்பர் 18) அரங்கேறும் ரீயாக்ஷன்களின் live updates இங்கே!
பிற்பகல் 1.30 : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாச்ன் அளித்த பேட்டியில், ‘வருமான வரித்துறையினர் அவங்க பணியை செய்கிறார்கள். அவர்களை யாரும் தடுக்க முடியாது’ என்றார். தம்பிதுரை, ஜெயகுமார், மைத்ரேயன் ஆகியோர் வேதனை தருவதாக கூறியிருந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் இப்படி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பகல் 12.45 : சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ‘ஏற்கனவே நடந்த ரெய்டுகளில் எடுத்த நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறை பதில் கூறட்டும். போயஸ் கார்டனில் நடந்த சோதனை பற்றி கருத்து கூறுகிறேன்’ என்றார்.
பகல் 12.30 : ரேஷனில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘ரெய்டு நடத்துறாங்க. இபிஎஸ், ஓபிஎஸ் வீட்டில் ஏன் ரெய்டு நடத்தவில்லை. அமைச்சர்கள் வீடுகளில் ஏன் ரெய்டு நடக்கலை. மாநில சுயாட்சிங்கிறாங்க. எங்கே இருக்கிறது மாநில சுயாட்சி?’ என கேள்வி எழுப்பினார்.
பகல் 11.15 : ஜெயலலிதா இல்லத்தில் நடந்த ரெய்டை பாஜகவுக்கு நெருக்கமான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தடுக்கவில்லை என நேற்று இரவு போயஸ் கார்டனில் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். இன்று அவரது இல்லம் முன்பு தொண்டர்கள் கூட வாய்ப்பு இருப்பதாக கருதி, அவரது இல்லத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
காலை 11.00 : கரூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, ‘அம்மாவின் இல்லத்தில் நடந்த சோதனை வேதனை தருகிறது. இது தொடர்பாக முதல் அமைச்சரை சந்தித்து பேசுவேன்’ என்றார். ‘இந்த சோதனையை கண்டிக்கிறீர்களா? ஏற்கிறீர்களா? எனக் கேட்டபோது, ‘ஏற்கவில்லை. இது வேதனையானது’ என்றார் தம்பிதுரை.
காலை 10.30 : அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டியில், ‘அம்மாவின் இல்லத்தில் சோதனை நடந்திருப்பது வேதனை தருகிறது. இதில் தமிழக அரசின் பங்கு எதுவும் இல்லை. ஆனால் இதற்கெல்லாம் காரணம், சசிகலா குடும்பம்தான். அவர்கள் அங்கு தங்கி இருந்ததுதான் பிரச்னைகளுக்கு காரணம்’ என்றார்.
காலை10.00 : சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகம் முன்பு அதிமுக.வினர் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு துப்பாக்கி ஏந்திய சுமார் 50 போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.
காலை 9.30 : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், ‘உரிய ஆதாரங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடந்திருக்கிறது. தமிழக மக்களின் பணத்தை மீட்கவே இந்த நடவடிக்கை. இதில் எந்த அரசியலும் இல்லை’ என்றார்.
காலை 9.20: டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டியில், ‘அம்மா இல்லம் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறோம் எனக் கூறிய ஒரு அமைச்சரும் இந்த சோதனையின்போது போயஸ் கார்டன் பக்கம் வரவில்லை. அதிமுக-வை அழித்து தங்கள் கட்சியை வளர்க்க வருமான வரித்துறையை ஏவி விட்டிருக்கிறார்கள். அம்மாவின் நண்பர்கள் என கூறியவர்கள், இந்த திட்டமிட்ட சதியை செய்திருக்கிறார்கள்’ என்றார்.
காலை 9.00 : டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத் கூறுகையில், ‘இது திட்டமிட்ட நடவடிக்கை. மத்திய அரசு இதை வேண்டுமென்றே செய்கிறது. ஆனால் இதையும் நாங்கள் சந்திப்போம்’ என்றார்.
காலை 8.30 : டிடிவி.தினகரன் அணியின் கொள்கைப்பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன், ‘அம்மா ரத்தம் சிந்தி உருவாக்கிய ஆட்சி இருக்கும்போதே இந்த ரெய்டு நடந்திருப்பது வேதனை தருகிறது. மத்தியில் இருப்பவர்கள் அதிமுக.வை அழிக்கும் திட்டத்துடன் இதை செய்கிறார்கள். இதை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்’ என்றார்.
Not sure TTV is right when he says Vivek asked IT Dept. if they had search warrant to search JJ room. Search warrant is usually for a premises, not separately issued for individual rooms inside a house.
— Sumanth Raman (@sumanthraman) November 18, 2017
காலை 8.00 : போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் இன்று (நவம்பர் 18) அதிகாலை 2 மணிக்கு வருமான வரித்துறை ரெய்டு முடிந்தாலும், இன்று காலையிலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதிமுக.வினர் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையிலும், ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்ற முன் எச்சரிக்கையிலும் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.