போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டை தொடர்ந்து இபிஎஸ், ஓபிஎஸ் இல்லங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் நேற்று (நவம்பர் 17) இரவு 9.30 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு கூடிய டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களின் பிரதான கோஷம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக இருந்தது. அதற்கு அடுத்த நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, வி.கே.சசிகலாவுக்கு எதிராக முதல் குரல் எழுப்பியவர் ஓபிஎஸ் என்பது மட்டும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களின் கோபத்திற்கு காரணமில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியைவிட டெல்லிக்கு நெருக்கமானவராக ஓ.பன்னீர்செல்வத்தையே அனைவரும் பார்க்கிறார்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை சூழ்நிலைக் கைதியாக டெல்லியை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக ஒரு சிலரிடம் கருத்து இருக்கிறது. தவிர, டெல்லியை ஆதரிக்கும் நெருக்கடியை எடப்பாடிக்கும் உருவாக்கியதே ஓபிஎஸ்-தான் என்கிற கருத்தும் இருக்கிறது. இதனாலேயே ஓபிஎஸ்.ஸுக்கு எதிராக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஓங்கி குரல் கொடுக்கிறார்கள்.
இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பெரிய பின்னடைவாக ஜெயலலிதா இல்லத்தில் நடந்த ரெய்டு அமைந்திருக்கிறது. பிரதமர் மோடியை வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் பாராட்டி மகிழ்கிற இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரால் இதை தடுக்க முடியாததை தொண்டர்கள் அதிருப்தியுடன் பார்க்கிறார்கள்.
இந்தச் சூழலை பயன்படுத்தி இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு எதிரான போராட்டங்களை டிடிவி தரப்பு தூண்டிவிட வாய்ப்பு இருப்பதாக போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்தே சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் எடப்பாடியின் இல்லத்தில் இன்று காலை முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
அதேபோல கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் ஓபிஎஸ்.ஸின் அரசு இல்லம், சென்னை போயஸ் கார்டன் அருகே வீனஸ் காலனியில் உள்ள ஓபிஎஸ் வீடு ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு சந்தேகப்படும்படி யார் உலவினாலும் போலீஸார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். இதேபோல சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
எனினும் இன்று பிற்பகல் வரை மேற்படி இடங்களில் அசம்பாவிதம் எதுவும் இல்லை. போலீஸார் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.