போயஸ் கார்டன் அதிர்ந்த நிமிடங்கள் : தீக்குளிப்பு மிரட்டல் விடுத்த தொண்டர்கள், விடிய விடிய டென்ஷன்

ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் வருமான வரி துறை ரெய்டால் விடிய விடிய டென்ஷனில் தவித்தது. தொண்டர்களின் தீக்குளிப்பு மிரட்டலால் போலீஸார் பதறினர்.

j.jeyalalitha, aiadmk, poes garden, income tax department, IT raids, tamilnadu government, vk sasikala, ttv dhinakaran, vivek jeyaraman

ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் வருமான வரி துறை ரெய்டால் விடிய விடிய டென்ஷனில் தவித்தது. தொண்டர்களின் தீக்குளிப்பு மிரட்டலால் போலீஸார் பதறினர்.

போயஸ் கார்டன், அதிகார மையமாகவே பார்த்து பழக்கப்பட்ட இடம்! இங்கு ஜெயலலிதாவை சந்திக்க வந்து செல்லாத தலைவர்கள் இல்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலை மட்டுமல்ல, இந்திய அரசியலையும் பல நேரங்களில் அதிர வைத்த அதிகார மையம் இது!

ஜெயலலிதாவின் அந்த போயஸ் கார்டன்தான் நவம்பர் 17-ம் தேதி (நேற்று) இரவு வருமான வரித்துறை ரெய்டால் அதிர்ந்தது. நேற்று இரவு 9 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் போயஸ் கார்டனை உலுக்கி எடுத்தனர்.

போயஸ் கார்டனில் சோதனை என்பது உணர்வுபூர்வமானது என்பதை வருமான வரித்துறை உணர்ந்திருந்தது. அதனால்தான் வழக்கமாக அதிகாலையில் தங்களது ரெய்டுகளை தொடங்கும் ஐ.டி., இங்கு மட்டும் இரவு 9 மணிக்கு மேல் ஊரடங்கிய வேளையை தேர்வு செய்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு போயஸ் கார்டன் இல்லத்தில் தங்கியிருந்த சசிகலா குடும்பத்தினர், தமிழக அரசு கொடுத்த நெருக்கடிகளை தொடர்ந்து அங்கு தங்குவதில்லை. சிறிய அளவிலான போலீஸ் பாதுகாப்பு, ஓரிரு ஊழியர்கள்தான் அங்கு வந்து சென்றபடி இருந்தார்கள். ஆனாலும் போயஸ் கார்டன் அறை சாவிகள் சசிகலா அண்ணன் மகனும் (இளவரசி மகன்), ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரியுமான விவேக்கிடம் இருந்தது.

தவிர, வருமான வரித்துறை சோதனை என்றால் சம்பந்தப்பட்ட இடம் யாரின் பொறுப்பில் இருக்கிறதோ, அவர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் விவேக்கிடம் தகவல் கொடுத்து அவரை சாவிகளுடன் வரும்படி அழைத்தது வருமான வரித்துறை! ஒரு வேளை இந்த நடைமுறை தேவையில்லை என்றால், காதும் காதும் வைத்த மாதிரி மிக ரகசியமாக போயஸ் கார்டன் ரெய்டு முடிந்திருக்கும்.

விவேக் ஜெயராமன் வருவதாக இருந்தால் எப்படியும் டி.டி.வி.தினகரனிடம் கூறிவிட்டுத்தான் வருவார் என்பது அதிகாரிகளுக்கு தெரியும். டி.டி.வி.தினகரன் ஊரையே கூட்டிவிடுவார் என்பதையும் அதிகாரிகள் எதிர்பார்த்திருந்தார்கள். எனவேதான் வருமான வரித்துறை வரும் முன்பே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இரவு 9.30 மணிக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் அறை, சசிகலாவின் அறை ஆகியவற்றை சோதனையிட்டனர். அங்கு ஒரு லேப் டாப்பும், 2 பென் டிரைவ்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா அறையை திறக்கும்படி ஐ.டி அதிகாரிகள் கூறியதற்கு விவேக் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே அதிகாரிகளுக்கு ஏமாற்றம்!

இரவு 9.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 2 மணி வரை மொத்தம் நான்கரை மணி நேரம் நடந்த இந்த சோதனையில் அதிகாரிகள் எதிர்பார்த்தபடி பெரிதும் எதுவும் சிக்கவில்லை என்றே கூறுகிறார்கள். சசிகலாவின் அறையில் இருந்து ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களை கத்தை கத்தையாக ஐ.டி அதிகாரிகள் அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது. அந்தக் கடிதங்கள் மூலமாக வருமான வரித்துறைக்கு என்ன துப்பு கிடைக்கப் போகிறது? என தெரியவில்லை.

இதற்கிடையே போயஸ் கார்டனுக்கு வெளியே இரவு 10 மணி முதல் தொண்டர்கள் கூட ஆரம்பித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.வும் டிடிவி.தினகரன் ஆதரவாளருமான வி.பி.கலைராஜன் அங்கு வந்து தன்னை போயஸ் கார்டன் உள்ளே அனுமதிக்கும்படி போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் அவரை விடவில்லை.

தூத்துக்குடியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்த டிடிவி.தினகரன், அங்கிருந்தபடியே தனது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியனை தொடர்புகொண்டு ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்தார். அவரும் சசிகலாவின் வழக்கறிஞர் என்ற அடிப்படையில் தன்னை உள்ளே அனுமதிக்கும்படி கேட்டார். ஆனால் அவரையும் விடவில்லை.

இதற்கிடையே வெளியே கூடியிருந்த தொண்டர்கள் ஆவேசமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு எதிராக கோஷமிட்டனர். போயஸ் கார்டன் பிரதான சாலையில் சிலர் மறியல் செய்தனர். அவர்களில் சிலர், ‘அம்மா இல்லத்தில் ரெய்டை நிறுத்தாவிட்டால் தீக்குளிப்போம்’ என ஆவேசப்பட்டனர்.

இதனால் போலீஸார் பதறினர். ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்குமோ? என்கிற அளவுக்கு பதற்றமான நிலை அப்போது இருந்தது. நிலைமையை உணர்ந்து கூடுதல் போலீஸார் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போராட்டம் நடத்தும் தொண்டர்களை உடனுக்குடன் அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி, போலீஸாருக்கு கட்டளைகள் வந்து சேர்ந்தன. அதைத்தொடர்ந்து போலீஸார் சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தனர். அப்போது போலீஸாருக்கு எதிராகவும் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

ரெய்டு நேரத்தில் பரபரப்பு கிளப்பிய இன்னொரு விஐபி ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா. இரவு 11 மணியளவில் அங்கு வந்த அவரும், ‘நான் தான் அம்மாவின் வாரிசு. என்னை வீட்டுக்குள் செல்ல விடுங்கள்’ என்றார். ஆனால் போலீஸார் விடவில்லை. அவரது உதவியாளர் ராஜா சகிதமாக வந்திருந்த தீபா, போலீஸ் தடுப்பை தள்ளிக்கொண்டு உள்ளே புக முயன்றார். அதற்கும் பலன் கிடைக்கவில்லை.

அதிகார மையமாக கோலோச்சிய போயஸ் கார்டன், வருமான வரித்துறை சோதனையால் விடிய விடிய டென்ஷனில் தவித்தது.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Jeyalalithas poes garden it raid tension till early morning

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express