சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை அகற்றகோரி மனு: சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணை!

ஜெயலலிதா படத்தை அகற்ற உத்ரவிடக் கோரி ஏற்கனவே திமுக தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது

ஜெயலலிதாவின் படத்தை அகற்ற சட்டசபைச் செயலாளருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக, பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று (பிப்ரவரி 12) தமிழ்நாடு சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ படம் திறக்கப்பட்டது. இதை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளராக இருந்தவர் ஜெயலலிதா. இவரின், முழு திருவுறுவப்படம் சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா, ஊழல் வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தண்டனை பெற்றவர். அவருக்கு விசாரணை நீதிமன்றம் 100 கோடி அபராதம் விதித்தது. இந்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவரின் படத்தை சட்டசபையில் திறந்து வைப்பது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும்.

ஜெயலலிதாவால் இருமுறை சபாநாயகர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் சபாநாயகர் தனபால். அதனால், அவருக்கு விசுவாசத்தை காட்டும் விதமாக, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்துள்ளார் . தமிழக சட்ட மன்றத்தில் திறந்து வைக்கப்பட்ட முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை உடனடியாக அகற்ற, சட்டசபை செயலாளர், உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.

பாமகவும் வழக்கறிஞர் கே.பாலு, வழக்கறிஞர் எஸ். துரைசாமி சார்பில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து முறையீடு செய்தனர்.சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, இன்று(13.2.18) விசாரணைக்கு வருகிறது. அரசு அலுவலங்களில் உள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற உத்ரவிடக் கோரி ஏற்கனவே திமுக தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

×Close
×Close