“மெர்சல் பட வசனம், விஜய்யின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுகிறது” என பாஜகவின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
‘மெர்சல்’ படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த புதன்கிழமை ரிலீஸானது. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தை அட்லீ இயக்கியுள்ளார். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
‘மெர்சல்’ படத்தில் மத்திய அரசின் திட்டங்களான ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து எதிர்மறையான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. ‘இந்த வசனங்களை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், படத்தின் மீது வழக்கு தொடர்வோம்’ என பாஜகவின் தமிழகத் தலைவரான தமிழிசை செளந்தரராஜன் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், பாஜகவின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜா, ட்விட்டரில் ‘மெர்சல்’ படம் குறித்தும் விஜய் குறித்தும் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். “மெர்சல் பட வசனம், விஜய் அவர்களின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுகிறது. முதலில், ஜிஎஸ்டி என்பது புதிய வரி அல்ல. சாராயத்திற்கு 58 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளிக் கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம். ஜோசஃப் விஜய்யின் மோடி வெறுப்பே மெர்சல்” என ட்விட்டரில் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
‘உங்கள் பாஜக தலைவர்கள் அனைவரும் ஆண்மகன் எனில், கல்வி, மருத்துவம் இலவசமாக அளிக்கத் தயாரா?’ என்று ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள ஹெச்.ராஜா, “ஏற்கெனவே நாடு முழுவதும் பள்ளிக் கல்வி மற்றும் மருத்துவம், அரசுப் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசம்தான்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “விஜய் அவர்களின் வருமான வரி ஏய்ப்பு செய்தி பற்றி விளக்கம் எதிர்பார்க்கலாமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ஹெச்.ராஜா.
“தமிழகத்தில் கடந்த 20 வருடங்களில் கட்டப்பட்ட சர்ச் 17500, மசூதிகள் 9700, கோயில்கள் 370. இதில், எதைத் தவிர்த்துவிட்டு மருத்துவமனை கட்டணும்?” என்றும் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.