எஸ்.வி. சேகரை கைதிலிருந்து காப்பாற்றுகிறாரா தலைமை செயலாளர்? விரைவில் மனு மீதான விசாரணை

பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசிய எஸ்.வி.சேகரை கைதிலிருந்து காப்பாற்ற தலைமை செயலாளர் முயற்சிப்பாக அளித்துள்ள மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.

சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசிய எஸ்.வி. சேகருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவருக்குத் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அடைக்கலம் அளித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கைதாக வேண்டிய எஸ்.வி. சேகரை கைதில் இருந்து தலைமை செயலாளராக உள்ள அவரின் அண்ணன் மனைவி கிரிஜா காப்பாற்றி வருவதாகவும், இதனால் கிரிஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் மனுவை, கவின் மலர் என்ற பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளது:

உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி மாணவிகளை வற்புறுத்தியதாக பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தைத் தமிழக கவர்னர் கூட்டினார்.
அப்போது பெண் நிருபர் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்காமல், அந்தப் பெண் நிருபரின் கன்னத்தை கவர்னர் தட்டினார். அவரது இந்தச் செயலுக்கு, பல தரப்பில் இருந்தும் கண்டனம் வந்தது. இதையடுத்து கவர்னர், மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில், பெண் பத்திரிகையாளர்களை கேவலமாக, அவதூறாகச் சித்தரித்து, தன்னுடைய முகநூல் பக்கத்தில் பா.ஜ.க. நிர்வாகியும், நடிகருமான எஸ்.வி.சேகர் கட்டுரை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசாரும் அவர் மீது கிரிமினல் வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், அவரை கைது செய்யவில்லை. எஸ்.வி.சேகரின் அண்ணன் மனைவி கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசின் தலைமை செயலாளராக உள்ளார். உயர் பதவியில் இருக்கும் இவர், தன்னுடைய உறவினர் எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யாத வண்ணம், அவருக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். இது சட்டப்படி குற்றமாகும்.

எனவே, ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.வி.சேகரை, போலீஸ் பிடியில் சிக்காமல் அவருக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்து வரும் கிரிஜா வைத்தியநாதன் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய, கிரிஜா வைத்தியநாதன் வீட்டில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நீதிமன்றத்தில் வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close