துப்புரவு பணிக்கான நேர்முகத் தேர்வு ஆங்கிலத்திலா? தமிழிலா?: நீதிபதிகள் சரமாரி கேள்வி

துப்புரவு பணிக்கான நேர்முகத் தேர்வு ஆங்கிலத்தில் நடக்குமா? தமிழில் நடக்குமா? என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியக கேள்விகள் எழுப்பினார்கள்.

உயர் நீதிமன்ற துப்புரவு பணியாளர் பதவிக்கான விளம்பரத்தை தமிழில் வெளியிட கோரியும், விண்ணப்பங்களை தமிழில் ஏற்க கோரியும் வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் பொதுநல மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், உயர் நீதிமன்றத்திற்கு 129 துப்புரவு தொழிலாளர்கள் பணி இடங்களை நிரப்ப உயர் நீதிமன்ற நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விளம்பரம் செய்துள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்பவர்களின் கல்வித் தகுதி 8-ம் வகுப்பு என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வித் தகுதியுள்ளவர்களுக்கு ஆங்கிலம் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர், சார்பில் வெளியிடப்பட்ட இந்த பணிக்கான விளம்பரத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதனால், தகுதியுள்ள நபர்கள் பலருக்கு, இந்த விவரம் தெரியாமல் போய் விடும். மேலும், இந்த விளம்பரத்தின் அடிப்படையில் பட்டதாரி விண்ணப்பம் செய்வார்கள். அவர்கள் துப்புரவு தொழிலாளர் பணிக்காக உயர்நீதிமன்றத்தில் நுழைந்து விட்டு, அதன்பின்னர் சட்டவிரோதமாக 3 பதவி உயர்வுகளை ஒரே நேரத்தில் பெற்று, உயர் பதவிக்கு சென்று விடுவார்கள். இதனால், துப்புரவு தொழிலாளர் பணியிடங்கள் மீண்டும் காலியாகி விடும். எனவே, துப்புரவு தொழிலாளர் பணியிடங்களை நிரப்புவது குறித்து தமிழில் விளம்பரம் வெளியிட உத்தரவிடவேண்டும்.

ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தின் அடிப்படையில் நேர்முக தேர்வு நடத்த தடை விதிக்கவேண்டும். மேலும் இந்த பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது ஆன்-லைன் மூலமாக வரவேற்கப்படுகின்றது. இதில் தமிழில் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜாரன வழக்கறிஞர் “துப்புரவு பணிக்கான விளம்பரத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளதால், அந்த பதவிக்கு தகுதியான நபர்களுக்கு அதுகுறித்த விவரம் தெரியாமல் போய்விடும்” என்று வாதிட்டார்.

உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழி ஆங்கிலமாகும். எனவே, ஆங்கில மொழியில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரம் தமிழ் மற்றும் ஆங்கில செய்தித் தாள்களில் வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த பணிக்கு சி.பி.எஸ்.இ மற்றும் ஐ.சி.எஸ். பாடத்திட்டத்தின் கீழ் அதிகம் படித்தவர்கள் விண்ணப்பம் செய்வார்கள்? சரி, துப்புரவு பணிக்கான நேர்முகத் தேர்வு ஆங்கிலத்தில் நடக்குமா? தமிழில் நடக்குமா? என்று சரமாரியக கேள்விகள் எழுப்பினார்கள்.

பின்னர், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி உயர் நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

×Close
×Close