ஜெயலலிதா மரணத்திற்கு நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு, அப்படியே கிடப்பில் போடப்பட்டது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி இறந்தார். 75 நாட்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு அளித்த சிகிச்சைகள் குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு நீதிமன்றத்தையும் சிலர் நாடினர்.
அப்போது முதல்வராக இருந்தவர், ஓ.பன்னீர்செல்வம்! ஆரம்பத்தில் அமைதியாக இருந்த ஓ.பி.எஸ்., அவரிடம் இருந்த முதல்வர் பதவியை சசிகலா அபகரிக்க தயாரானதும் வெகுண்டு எழுந்தார். சென்னை மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் இருந்தவர், ‘ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் நாட்டு மக்களுக்கு சந்தேகம் இருக்கிறது. எனவே விசாரித்து உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்’ என்றார்.
பிறகு, ‘ஜெயலலிதா மரணத்திற்கு சி.பி.ஐ. விசாரணை, சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு முழுமையாக நீக்குதல்’ ஆகிய இரட்டை கோரிக்கைகளை வைத்து ‘தர்மயுத்தம்’ நடத்தினார். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகுதான், எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைப்பு பேச்சுவார்த்தைக்கே வருவோம் என ஓ.பி.எஸ். அணியினர் கூறி வந்தனர்.
ஆனால் அந்த இரு கோரிக்கைகளையுமே முழுமையாக ஏற்காமல், புதிதாக இரு அறிவிப்புகளை ஆகஸ்ட் 17-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தலைமைச் செயலகத்தில் நிருபர்களை சந்தித்து அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் ஒன்று, ‘ஜெயலலிதா மரணத்திற்கு உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்ட விசாரணை கமிஷன் அமைப்போம்’. மற்றொன்று, ‘ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசே ஏற்று நினைவில்லமாக பராமரிக்கும்’.
இவற்றில் இரண்டாவது அறிவிப்புக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அதிகாரிகள் போயஸ் கார்டனுக்குள் புகுந்தனர். அதன் நீள, அகலங்களை அளந்தனர். அங்கிருந்த தனியார் பாதுகாவலர்கள் விரட்டப்பட்டு, போலீஸாரின் கட்டுப்பாட்டில் அந்த ஏரியா வந்தது. அதன்பிறகு அந்த விவகாரம், கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.
எடப்பாடியின் முதன்மையான அறிவிப்பான நீதி விசாரணைக்கு யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அன்று அறிவித்ததோடு சரி! அதன்பிறகு அந்த விவகாரத்தில் இம்மிகூட நகரவில்லை. அந்த இரு அறிவிப்புகளையும் நம்பியோ, அல்லது வேறு அழுத்தம் காரணமாகவோ மறுநாளே ஓ.பி.எஸ். அணி வந்து ஒட்டிக்கொண்டது மட்டும்தான் ஒரே லாபம்.
பொதுவாக விசாரணை கமிஷன்கள், விசாரணை அறிக்கையை வழங்க வருடங்களை இழுத்தடிப்பது உண்டு. அப்படியே அந்த ஆணையம் அறிக்கை சமர்ப்பித்தாலும், அரசு அதை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எனவே பெரும்பாலான விசாரணை ஆணையங்கள் கண் துடைப்புதான். ஆனாலும் விசாரணை ஆணையம் அமைப்பதாக சொன்ன மறுநாளே, விசாரணை ஆணைய நீதிபதியின் பெயர், விசாரணை வரம்பு, காலக்கெடு ஆகியவற்றை அரசு தரப்பில் அறிவித்து விடுவதுதான் கடந்த கால வரலாறு!
ஆனால் ஜெயலலிதா மரண சர்ச்சை விவகாரத்தில் நீதி விசாரணை அறிவித்து, இரு வாரங்கள் கடந்த நிலையிலும் இன்னும் விசாரணை ஆணைய நீதிபதி பெயரையே அரசு அறிவிக்கவில்லை. ‘தர்மயுத்தம்’ நடத்திய ஓ.பன்னீர்செல்வம்தான் இப்போது துணை முதல்வர். அரசு விழாக்களில் முதல்வருடன் கலந்து கலந்துகொண்டு, மூச்சுக்கு மூச்சு ‘இது அம்மாவின் அரசு’ என அவரும் முழங்குகிறார். ஆனால் அறிவித்த நீதி விசாரணை என்னாச்சு? என கேட்கவில்லை.
ஓ.பி.எஸ்.ஸின் தர்மயுத்தக் கோரிக்கைகளில் மற்றொன்று, சசிகலா குடும்பத்தை நீக்குவது! அண்மையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அதைப்பற்றி ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகளே மூச்சு விடவில்லை. செப்டம்பர் 12-ல் நடைபெறும் பொதுக்குழு அழைப்பிதழ் அஜென்டாவிலும் ‘சசிகலாவை நீக்கப்போவதாக’ அறிவிப்பு இல்லை. முன்கூட்டியே அதை அறிவித்தால் சில அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மத்தியிலேயே எதிர்ப்பு கிளம்பலாம் என்பதால்தான் ‘சீக்ரெட்’டாக வைத்திருக்கிறார்கள்.
தனது தர்மயுத்த கோரிக்கைகளுக்கு ஓ.பி.எஸ். எப்போது குரல் கொடுக்கப் போகிறார் எனத் தெரியவில்லை.