பதவியை காப்பாற்றிக் கொள்ள நினைத்தால், ஆட்சி நீடிக்காது : டிடிவி தினகரன் எச்சரிக்கை

தொண்டர்களை விட்டுவிட்டு, தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று இணைந்தால், அதற்கான ஆயுட்காலம் நீடிக்காது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தொண்டர்களை விட்டுவிட்டு, தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று இணைந்தால், அதற்கான ஆயுட்காலம் நீடிக்காது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுக பிளவுபட்டு குழப்பத்தில் தவித்து வருகிறது. அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. அதிமுக-வின் பொதுச்செயலாளர் யார் என்று தீர்மானிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தது.

ஓபிஸ் அணியின் கோரிக்கையின் படி டிடிவி தினகரனை கட்சியில் ஒதுக்குதல், ஜெயலலிதா விசாரணையில் நீதி விசாரணை அமைத்தல் உள்ளிட்டவற்றை எடப்பாடி அரசு மேற்கொண்டுள்ளது. ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை தெரிவித்த போதிலும், தற்போது மீண்டும் இணையும் என்றே தெரிகிறது. ஒபிஎஸ் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன், இரு அணிகளும் இணைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் உள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் சந்தித்தார். சசிகலாற்கு இன்று 63-வது பிறந்தநாள் என்பதால், டிடிவி தினகரன் அவரது குடும்பத்தினருடன், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, எம்.எல்.ஏ-க்களும் உடன் சென்றிருந்தனர். எனவே, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைப்புகள் குறித்து டிடிவி தினகரன், சசிகலாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். டிடிவி தினகரனுக்கும் பல எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்பினையடுத்து, டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது: சசிகலா சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். விரைவில் சில ஆபரேஷன்கள் நடக்கும். அவசர கதியில் ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக்க முயற்சி நடக்கிறது. இது சுயநலத்திற்காக மேற்கொள்ளப்படுகிறது என்றால் அது சரியாக இருக்காது. எம்.ஜி.ஆர்-ன் மறைவிற்கு பின்னர் 1987-ம் ஆண்டு அதிமுக பிளவுட்டது. பின்னர் தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஜெயலலிதா தலைமையில் கட்சி மீண்டும் ஒன்றிணைந்தது. அது ஒரு இயற்கையான நிகழ்வு, அதில் சுயநலம் ஏதுமில்லை.

ஆனால், தற்போது சிலர் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ளவும், ஒரு வியாபார நோக்கத்தில் செய்யப்படும் உடன்படிக்கை போலவும் செயல்பட்டு வருகின்றனர். தொண்டர்களை விட்டுவிட்டு, தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று இணைந்தால், அதற்காக ஆயுட்காலம் நீடிக்காது. இந்த நடவடிக்கைகளை கவனித்து வருகிறோம், தொண்டர்களின் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுவோம்.

எம்.எல்.ஏ-க்கள் பலத்தை எப்போது காட்டப்போகின்றீர்கள்?

இன்று கூட என்னுடன் எம்.எல்.ஏ-க்கள் வந்துள்ளனர். இன்னும் பல எம்.எல்.ஏ-க்கள் “ஸ்லீப்பர் செல்” போல செயப்பட்டு வருகின்றனர். எம்.எல்.ஏ-க்கள் பலம் என்ன என்பது குறித்து தற்போது கூற முடியாது. தேவையானபோது அதனை நாங்கள் வெளிப்படுத்துவோம்.

ஜெயலலிதா மரணத்தில் விசாரணை கமிஷன் வேண்டும் என்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கூறியிருந்தேன். இந்த விசாரணை கமிஷன் மூலம் சசிகலா எந்தவித குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்படும் என்று கூறினார்.

முன்னதாக, டிடிவி திகனரன் குறித்து வெளிப்படையாக விமர்சிக்காத எடப்பாடி பழனிசாமி அணியினர், தற்போது டிடிவி தினகரன் குறித்து வெளிப்படையாகவே விமர்சிக்கின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், டிடிவி தினகரனும் மாறிமாறி கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.

×Close
×Close