கொல்கத்தாவில் இருந்து வந்திருக்கும் ஐந்து அதிகாரிகள் கொண்ட போலீஸ் குழு, நீதிபதி கர்ணனை தேடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நீதிபதி கர்ணன் தனது கைதினை தவிர்க்கும் பொருட்டு, நாட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என்று கர்ணனின் நெருங்கிய உதவியாளரும், அவரது சட்ட ஆலோசகருமான பீட்டர் ரமேஷ் குமார் இன்று கூறியுள்ளார். மேலும், இந்திய ஜனாதிபதி சந்திக்க நேரம் ஒதுக்கினால் மட்டுமே, மீண்டும் இந்தியாவிற்கு வருவார் என தெரிவித்துள்ளார்.
நீதிபதி கர்ணன் இந்திய எல்லையைத் தாண்டி "நேபாள் அல்லது வங்கதேசம்" சென்றிருக்கலாம் என கூறிய குமார், கர்ணன் எப்படிச் சென்றார் என்பதை கூற மறுத்துவிட்டார். இருப்பினும் அவர் சாலை மார்க்கமாக தான் சென்றுள்ளார் என கூறியுள்ளார். சென்னையில் இருந்து இந்தியாவின் எந்த எல்லையை தாண்ட வேண்டும் என்றாலும், குறைந்தது 36 மணி நேரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குமார் பேசிய போது, "நீதிபதி கர்ணன் தனக்கு நீதி கிடைக்கும் வரை ஆஜராகமாட்டார். அவர் உச்சநீதிமன்ற உத்தரவின் விரிவான பிரதியை பெறாமல், அவரால் அந்த தீர்ப்பின் சாராம்சத்தை அறிய முடியாது. ஜனாதிபதி தான் அவரை நியமித்தார். எனவே, பணியாளரும், பணி கொடுத்தவரும் சந்திப்பதற்கு என சில நெறிமுறைகள் உள்ளது. மேலும், 20 மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக அவர்களது ஊழல் புகார் குறித்து, நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த மனு, இன்னும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் உறங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது கர்ணன் சிறைக்கு செல்ல வேண்டுமெனில், வழக்கு தொடரப்பட்ட அந்த அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளை என்ன செய்வது? இத்தனைக்கும், கர்ணனின் மனு நிராகரிக்கப்பட கூட இல்லை. நீதிபதி கர்ணன், மறு ஆய்வு மனு ஒன்றை விரைவில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்" என தெரிவித்துள்ளார்.